ஜூட் சமந்த
பல்லம - வத்துபொல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இயங்கி வந்த பெரிய அளவிலான கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை பல்லம பொலிஸ் அதிகாரிகள் நேற்று புதன்கிழமை (27) சுற்றிவளைத்துள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்த சுற்றி வளைப்பின் போது, விற்பனைக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 69,000 லிட்டர் (92 போத்தல்கள்) கசிப்பு, கசிப்பு உற்பத்திக்கு தேவையான 210 லிட்டர் கோடா அடங்கிய ஒரு பீப்பாய், செப்புச் சுருள் , எரிவாயு அடுப்பு மற்றும் சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் பொலிஸார் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மிகவும் சூட்சகமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்து வெளிப் பிரதேசங்களுக்கு விநியோகித்து வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், வரும் நிக்கினி போயா தினத்தை முன்னிட்டு மதுபான சாலைகள் மூடப்படும் சூழலைப் பயன்படுத்தி, குறித்த கசிப்பை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக இந்த பாரிய உற்பத்தியை மேற்கொண்டுள்ளார் என தாம் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் , கைப்பற்றப்பட்ட அனைத்து சான்று பொருட்களையும் ஆனமடுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுரேஷ் பிரதீப் ஜயவர்தன தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் இந்த அதிரடி சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர்.
