முந்தலில் வீடு புகுந்து பணம் - நகை கொள்ளை!


ஜூட் சமந்த

முந்தல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மங்கள எளிய – நுகசேவனகம பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மங்கள எளிய – நுகசேவனகம கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய முந்தல் பொலிஸார் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த திருட்டுச் சம்பவம் நேற்று புதன்கிழமை (26) மதியம் இடம்பெற்றதாக குறித்த பெண் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தனது கணவர் ருமேனியாவில் பணிபுரிவதால் வீட்டில் தான் மட்டும் தங்கியிருந்ததாகவும், முந்தல் பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்வதாகவும் குறித்த பெண் பொலிஸ் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

புதன்கிழமை (26) வழக்கம் போல் தான் வேலைக்குச் சென்றதாகவும், பின்னர் வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய பின்னரே தங்க நகைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளமை குறித்துத் தெரிந்துகொண்டதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதன்போது 17 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளும், 70 ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் வெளிப்படுத்தியுள்ளார்.

திருடர்கள் குளியலறை ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்து, அலமாரியில் இருந்த பணத்தையும், தங்க நகைகளையும் திருடிவிட்டு, சமையலறை கதவை திறந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும் இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யார் என்பது பற்றி இதுவரை தெரியவில்லை எனத் தெரிவித்த முந்தல் பொலிஸார் சம்பவம் குறித்து பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டனர்.


Post a Comment

Previous Post Next Post