சொகுசு காரில் கடத்தப்பட்ட சட்டவிரோத மதுபானம்!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் இருவருடன், சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 பைகளில் அடைக்கப்பட்ட 27,000 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபான ஸ்பிரிட் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கார் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, கிந்தெல்பிட்டி பகுதியில் வைத்து இந்த சந்தேகத்திற்குரிய காரை நிறுத்தி சோதனையிட்ட போது, ​​அதன் பின்பக்க இருக்கைகள் அகற்றப்பட்டு மதுபானப் பைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த மதுபானம் ஹிரண பொலிஸ் பிரிவைச் சேர்ந்த மதுபான கடத்தல்காரரான 'சலா' என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பாணந்துறை கல்துடே மற்றும் பாணந்துறை ஹிரண பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். 

இச்சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Post a Comment

Previous Post Next Post