ரஸீன் ரஸ்மின்
புத்தளம் மற்றும் சிலாபம் பிரதேசத்திற்கான காதி நீதிமன்ற நடவடிக்கைகள் கடந்த (26) புதன்கிழமை முதல் புத்தளம் காதி நீதிமன்ற வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புத்தளம் மற்றும் சிலாபம் பிரதேசத்திற்கான புதிய காதி நீதிபதியாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ள அஷ்ஷெய்க் என்.அஸ்மீர் (உஸ்வி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி அங்குரார்ப்பண நிகழ்வில் முன்னாள் காதி நீதிபதியும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான அஷ்ஷெய்க் நெய்னா புஹாரி (காசிமி) விஷேட அதிதியாக கலந்துகொண்டார்.
அத்துடன், அகில இலங்கை ஜம்இயய்துல் உலமா மாவட்ட கிளை தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம்.தமீம் (ரஹ்மானி), புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் (இஸ்லாஹி), முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள புத்தளம் மாவட்ட உத்தியோகத்தர் முஹம்மது இப்ஹாம், புத்தளம் பெரிய பள்ளி தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் ஏ.ரி.எம்.நிஜாம் உட்பட நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், ஜம்இய்யாவின் புத்தளம் நகரக்கிளை நிர்வாக உறுப்பினர்கள், முஸ்லிம் விவாக பதிவாளர்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், உலமாக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது அகில இலங்கை ஜம்இயய்துல் உலமா மாவட்ட கிளை தலைவர் அஷ்ஷெய்க் தமீம் மௌலவி, புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் (இஸ்லாஹி) ஆகியோர் இங்கு சிறப்புரையாற்றினார்கள்.
புத்தளம் காதி நீதிமன்றம் மீண்டும் ஆரம்பித்தி வைக்கப்பட்டமை தொடர்பில் தமது மகிழ்ச்சியையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
புத்தளத்தில் காதி நீதிமன்ற செயற்பாடுகள் நீண்ட காலம் இடம்பெறாததால், மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
எனினும், பலருடைய முயற்சியின் பின்னர் புத்தளத்தில் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இப்போதுதான் எல்லோருக்கும் பெரும் மன நிம்மதியை தந்திருக்கிறது.
புத்தளம் காதி நீதிமன்ற செயற்பாடுகளை நல்ல முறையில் முன்னெடுத்து செல்ல, புதிய காதி நீதிபதிக்கு அனைவரும் தமது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.
அத்துடன், இந்த காதி நீதிமன்ற கட்டமைப்புக்களை பாதுகாக்க வேண்டியது நம் எல்லோரினதும் பொறுப்பாகும் எனவும் தமது உரைகளில் சுட்டிக்காட்டினார்கள்.
மேலும் இந்த நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் காதி நீதிபதியும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான அஷ்ஷெய்க் நெய்னா புஹாரி (காசிமி) காதி நீதிமன்ற செயல்பாடுகள் தொடர்பில் சிறப்பு உரையாற்றியதுடன், விஷேட துஆப் பிரார்த்தனையும் செய்தமை குறிப்பிடத்தக்கது.




