ரஸீன் ரஸ்மின்
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் என்.டி.எம். தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பட்ட முஹம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்டுள்ள அந்த வெற்றிடத்திற்கு வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளருமான என்.டி.எம்.தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (2025.12.02) செய்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
புத்தளம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் படி, என்.டி.எம்.தாஹிருக்கு பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் வழங்கியமைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு புத்தளம் மக்கள் தமது நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவராகவும், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினராகவும் இருந்து, புத்தளம் மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம் , போக்குவரத்து உள்ளிட்ட பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்த என்.டி.எம்.தாஹிர் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் புத்தளம் மாவட்டத்திலிருந்து தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்லும் இரண்டாவது உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட இவர், வரும் வெள்ளிக்கிழமை (05) சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
