2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகளை இழந்து, சுமார் மூன்றரை ஆண்டு காலம் கடினமான மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்த பூனாகலை, கபரகலை பகுதியினைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட "நவோதயாபுரம்" வீட்டுத் திட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (28) இடம்பெற்றது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு குறித்த வீட்டை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
மலையக மக்கள் எமது சகோதர மக்கள் என்ற வகையில் இந்நாட்டின் பூரண உரிமைகளையும் வாழ்க்கையையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும், பல நூற்றாண்டுகளாக அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை அவர்களின் பிள்ளைகளுக்கும் உரித்தாக்குவது நியாயமற்றது என்றும் இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, இந்நாட்டில் பிறந்து, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்து, இறுதியில் இப்பூமிக்கே மண்ணாகும் ஒவ்வொரு மனிதனுக்கும் சிறந்த வாழ்க்கையை உரித்தாக்கும் பொறுப்பினை எமது அரசாங்கம் ஏற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டிற்கு வருவதில் இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதையும் இங்கு நினைவு கூர்ந்தார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வீட்டு நிர்மாணத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் ஈடுபடும்போது மலையக மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பிரிவுகளை அந்த ஒப்பந்தங்களில் சேர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் இதன்போது குறிப்பிட்டார்.
நமது நாட்டின் இதயமாகக் கருதப்படும் மத்திய மலைநாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பையும் இங்கு வலியுறுத்தி, அதற்கான பொறுப்புகளை வகிக்கும் அனைத்து நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரங்களை ஒருங்கிணைத்து, முழுமையான அதிகாரங்களைக் கொண்ட மத்திய மலைநாட்டுப் பாதுகாப்பு அதிகாரசபையை அமைப்பதற்கான சட்டத்தை இந்த வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, மத்திய மலைநாட்டை மீண்டும் வளப்படுத்தி எதிர்கால சந்ததியினருக்கு உரித்தாக்கும் தேசியக் கடமையை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
மேலும், இத்திட்டம் மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகச் செயற்படுத்தப்படும் ஒரு சிறப்பான வேலைத்திட்டம் என்று பாராட்டிய ஜனாதிபதி, அதற்குப் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் வீட்டு நிர்மாணப் பணிகளின் ஒவ்வொரு கட்டத்திலும் தீவிரமான மற்றும் பாராட்டுக்குரிய பங்களிப்பை வழங்கிய இலங்கை இராணுவப் பொறியியல் படையணிக்கும் நன்றி தெரிவித்தார்.
- ஜனாதிபதி ஊடகப் பிரிவு -





