ரஸீன் ரஸ்மின்
புத்தளம் தள வைத்தியசாலையை தரமுயர்த்துவது மற்றும் அபிவிருத்தி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணகுலசூரிய தலைமையில் நேற்று (21) ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைஸல் , புத்தளம் மாநகர மேயர் ரின்ஷாட் அஹ்மட் தலைமையிலான குழுவினரும், வடமேல் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
புத்தளம் தள வைத்தியசாலையை தரம் உயர்த்துவது சம்பந்தமாகவும், அதற்கான திட்டங்கள் தொடர்பாகவும், தற்போது காணப்படுகின்ற ஆளணி மற்றும் பௌதீக வள குறைபாடுகள் தொடர்பாகவும் , தரமுயர்த்தல் மற்றும் அபிவிருத்தி செய்ய வேண்டியதன் தேவைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைஸல் தலைமையிலான குழுவினர் ஆளுநர் மற்றும் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு எடுத்துரைத்தனர்.
மேலும் , கொத்தான்தீவு கிராமிய வைத்தியசாலை வைத்தியர் பற்றாக்குறை சம்பந்தமாக ஆளுநரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டதுடன், இரண்டு வாரங்களுக்குள் புதிய வைத்தியர் ஒருவரை கொத்தான்தீவு கிராமிய வைத்தியசாலைக்கு நியமிக்க ஆளுநர் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் போது புத்தளம் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டலின் கீழ், புத்தளம் தள வைத்தியசாலை விரைவில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாவட்ட பொது வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைஸல் இதன்போது தெரிவித்தார்.