ரஸீன் ரஸ்மின், எம்.ஏ.ஏ.காசிம்
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இலங்கை சுங்கம் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான ரெமடோல் எனும் போதை மாத்திரைகள் புத்தளம், பாலாவியில் உள்ள இன்சீ சீமெந்து தொழிற்சாலையில் கொழும்பு 6ஆம் இலக்க நீதிமன்ற நீதிபதி கசுன் காஞ்சன தசநாயக்க முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை (21) அதிக வெப்பநிலை உலையில் இட்டு அழிக்கப்பட்டன.
கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி சிறுவர்களுக்கும், வயோதிபர்களுக்கு பயன்படுத்தக் கூடிய 'பெம்பஸ்' இறக்குமதி என்ற போர்வையில் குறித்த போதை மாத்திரைகள் மிகவும் சூட்சகமான முறையில் கொள்கலனிற்குள் அடைக்கப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட போது இலங்கை சுங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த போதை மாத்திரைகள் சுமார் இரண்டு கோடிக்கும் அதிக பெறுமதியுடையது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கொள்கலன் மீது சந்தேகம் கொண்ட இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளும், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் இணைந்து பரிசோதனை செய்த போது, குறித்த கொள்கலனுக்குள் 'பெம்பஸ்' பெட்டிகளை போன்று மிகவும் சூட்சகமான முறையில் ரெமடோல் போதை மாத்திரைகள் பெட்டிகளில் பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.
இருப்பினும், மேற்படி விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் 2015 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட விசாரணையில் எந்தத் தவறும் வெளிப்படுத்தப்படாத தால், போதை மாத்திரைகள் கொண்டுவரப்பட்ட கொள்கலனை சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கு வழங்க சட்டமா அதிபர் அனுமதி வழங்கியிருந்தார்.
இருந்த போதிலும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக விசாரணைக்குப் பின்னர், 2023 நவம்பர் 27 அன்று வெளியிடப்பட்ட 2360-2021 ஆம் இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானியில், 2021 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நஞ்சு , அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் சட்டத்தின் கீழ் நச்சு மற்றும் ஆபத்தான மருந்துகள் அகற்றுவது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.
அதன்படி, சம்பந்தப்பட்ட வழக்கு பொருள் தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், குறித்த கொள்கலனில் காணப்பட்ட ரெமடோல் போதை மாத்திரைகளை புத்தளம், பலாவியில் உள்ள இன்சி சீமெந்து தொழிற்சாலையில் உள்ள அதிக வெப்பநிலை உலையில் இட்டு அழிப்பதற்கு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.