ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - சாலியாவௌ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அநுராதபுரம் புத்தளம் பிரதான வீதியின் 17ஆம் கட்டைப் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என சாலியாவௌ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் இடம்பெற்ற போது, அநுராதபுரம் புத்தளம் பிரதான வீதியின் 17 ஆம் கட்டைப் பகுதியில் காட்டு யானையொன்று வீதியை ஊடறுத்து பயணித்துக் கொண்டிருப்பதை அவதானித்த லொறியின் சாரதி வீதியில் முன்னோக்கி செல்லாமல் யானை வீதியை கடக்கும் வரை வீதியில் தரித்து நின்றுகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, அநுராதபுரம் பகுதியில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மற்றுமொரு லொறியொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பினபக்கமாக சென்று மோதியுள்ளது என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதன்போது, நிறுத்தி வைக்கப்பட்ட லொறியின் மீது பின்பக்கமாக மோதிய மற்றுமொறு லொறியின் சாரதி மற்றும் சாரதிக்கு அருகில் இருந்து பயணித்த இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அங்கிருந்தவர்களால் சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் சாலியாவௌ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.