அஸ்வெசும நலன்புரி உதவித் தொகை பெறத் தவறிய தகுதி உள்ள மக்களுக்கு மீண்டும் கணக்கெடுப்பு அவசியம் என ஐக்கிய காங்கிரஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பில் ஐக்கிய காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அஸ்வெசும நலன்புரி உதவித் தொகை தொடர்பில் நாங்கள் கீழ்க்காணும் முக்கியக் கோரிக்கையை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்:
தகுதி பெற்ற ஏராளமான குடும்பங்கள், அரசாங்கத்தினால் வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி உதவித் தொகையை பெற முடியாமல் தவிக்கின்றனர். இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு நிதியுதவி வழங்குதல் என்பதையும், அவர்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே என அரசாங்கம் வலியுறுத்தியது.
எனினும், நடைமுறையில் பிழைகள் மற்றும் போதிய விளக்கங்களின்மையால், இணைய வசதியற்ற மற்றும் கல்வி பின்தங்கிய மக்கள்தான் பெரும்பாலன தகுதி உள்ள நபர்களாக இருந்தும் உதவியை இழந்து நிற்கின்றனர்.
நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை:
மீண்டும் துல்லியமான, நேரடி கணக்கெடுப்பு செயற்பாடு ஆரம்பிக்கப்பட வேண்டும்.
இது ஒவ்வொரு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரின் மேற்பார்வையில், வீடு வீடாக நடைபெற வேண்டும்.
முறையாக தகுதி உள்ளவர்களை அடையாளம் காண்பதற்கான மேம்பட்ட தரவுகள் பெறப்பட வேண்டும்.
தவறவிடப்பட்ட நபர்களுக்கு அனுபவ ரீதியாகவும் உரிமை அடிப்படையிலும் நிதியுதவி வழங்கப்பட வேண்டும்.
இது போன்ற நலன்கள், நிஜமாகவே தேவைப்படுவோரிடம் சென்று சேர வேண்டும் என்பதனையே நாங்கள் வலியுறுத்துகிறோம்.
ஐக்கிய காங்கிரஸ், இந்நிலையில் தகுதி வாய்ந்த மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பதோடு, தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்காக அரசாங்கத்தின் உடனடி தலையீட்டை கோருகிறது.
- சப்வான் சல்மான்
செயலாளர், ஐக்கிய காங்கிரஸ்.