5000 ரூபா இலஞ்சம் வாங்கிய காழி நீதிபதி கைது...!

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் காழி நீதிமன்ற நீதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று (23) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

5,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முற்பட்ட போது இவர் புத்தளம் காழி நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புத்தளம், வெட்டாளை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் விவாகரத்து வழக்கு தொடர்பில் விவாகரத்து சான்றிதழை வழங்குவதற்காக குறித்த காழி நீதிமன்ற நீதிபதி, அந்த பெண்ணிடம் 5000 ரூபாவை இலஞ்சமாக கேட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, சம்பவம் இடம்பெற்ற நேற்று (23) மாலை புத்தளம் காழி நீதிமன்றத்திற்கு வருகை தந்த குறித்த பெண், காழி நீதிபதி கேட்ட 5000 ரூபா பணத்தை அவரிடம் கொடுத்த போதே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மே 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post