ரஸீன் ரஸ்மின்
முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மங்கள எளிய சமுர்த்தி வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்ட புதுவருட விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் நேற்று (27) கணமூலை சேகு அலாவுதீன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கணமூலை தெற்கு கிரம சேவகர் பிரிவில் உள்ள கணமூலை, லதீப் மாவத்தை மற்றும் மிஹ்ராஜ்புரம் ஆகிய மூன்று சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு இதற்கான அனைத்து ஒழுங்குகளையும் செய்திருந்தன.
மங்கள எளிய சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.எம்.நபீல் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முந்தல் பிரதேச செயலாளர் எம்.எஸ்.பி.டயிள்யூ.ரி.எம்.எஸ்.பி. மல்வில கலந்துகொண்டார்.
அத்துடன், முந்தல் பிரதேச செயலக கிராம நிர்வாக உத்தியோகத்தர் அஜித் கிரிசான்டஸ்ட் , முந்தல் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஏ.ஐ.ஆரியரத்ன, முந்தல் சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர் பி.எம்.தினுக சந்திரசேகர, கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் தலைவர் சேகு அலாவுதீன், கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் பைசர் மரிக்கார், கணமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன்புரி சங்க தலைவர் எம்.எஸ்.முஸம்மில், தொழிலதிபர் அஸ்ரின் அலாவுதீன் உட்பட சமுர்த்தி கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மங்கள எளிய சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை தலைவர் உட்பட உறுப்பினர்கள், சமுர்த்தி சங்க தலைவர்கள் உட்பட உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஆண்கள், பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டிகள், யானைக்கு கண் வைத்தல், முட்டி உடைத்தல், சாக்கோட்டம், யோகட் பரிமாறுதல், முட்டை வீசுதல், சந்தேக நபரை தேடுதல், பலூன் நடனம், அழகு ராணிப் போட்டி உள்ளிட்ட பல போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந்த விளையாட்டு போட்டியில் புபுதுகம, மங்கள எளிய, கட்டைக்காடு, கொத்தாந்தீவு, கணமூலை தெற்கு, சின்னப்பாடு, பள்ளிவாசல்பாடு, பெருக்குவற்றான், சமீரகம ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.
குறித்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு அதிதிகாளல் பெறுமதியான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது பள்ளிவாசல்பாடு மற்றும் கணமூலை தெற்கு சிறுவர் சங்கங்களின் மாணவர்களின் வரவேற்பு நடனங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.