இரு ஊடகவியலாளர்கள் உட்பட நான்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கௌரவ பட்டம் வழங்கி கௌரவிப்பு

சாஹிப், ரிபாக்

புத்தளத்தில் இரண்டு ஊடகவியலாளர்களும், நான்கு  தமிழ் பேசும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களும் கௌரவ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் மக்கள் நலன் மன்றம் இவர்களுக்கான கௌரவ பட்டங்களை வழங்கி கௌரவித்துள்ளன.

மன்றத்தின் தலைவர் மோதரவானே அமிலஸ்ரீ தேரர் தலைமையில் குருநாகல் - நாரம்பொல Hotel Grown Field ஹோட்டலில் இந்த நிகழ்வு இன்று (09) இடம்பெற்றது.

மக்கள் மத்தியில் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணியாற்றிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள், சமயத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இதன்போது கௌரவ பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கை மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் மக்கள் நலன் மன்றத்தின் கோரிக்கைக்கு அமைய, பிரதேச செயலகங்கள் ஊடாக சமூகத்தில் பணியாற்றுவோர் தொடர்பில் விபரங்கள் சேகரிக்கப்பட்ட பெயர் விபரங்களுக்கு அமைய, அவர்களின் சேவைக்கு ஏற்ப அவர்களுக்கான கௌரவ பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், முன்னாள் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்களான தேசகீர்த்தி ரிபாஸ் நஸீர் , முஹம்மது ரிஜாஜ் மற்றும் கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் தேசகீர்த்தி முஹம்மது ஆஷிக் ஆகியோர் "தேசபந்து" , " சத்கோரல அபிமானி தேச கிதௌசி ஸ்ரீலங்கா புத்ர" ஆகிய கௌரவ பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் முஹம்மது அஸ்லம் "சத்கோரல அபிமானி தேச கிதௌசி ஸ்ரீலங்கா புத்ர" கௌரவ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இதேவேளை, மக்களின் உரிமைகளப் பாதுகாப்பதற்காக மனித நேயத்தோடும், அர்ப்பணிப்போடும் தமது கடமைகளை வகைப்பொறுப்போடு முன்னெடுத்துவரும் இரண்டு ஊடகவியலாளர்களும் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது, RJS தமிழ் இணையம் மற்றும் புதிய பாதை மின்னிதழ் என்பனவற்றின் பிரதம ஆசிரியர், ஊடகவியலாளர் ரஸீன் ரஸ்மின் மற்றும் Sky News செய்தி முகாமையாளர் ஆர்.எம்.சப்ராஸ் ஆகியோர் "ஊடக அபிமானி மற்றும் கலாகீர்த்தி" கௌரவ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

RJS தமிழ் இணையம் மற்றும் புதிய பாதை மின்னிதழ் என்பனவற்றின் பிரதம ஆசிரியர், ஊடகவியலாளர் ரஸீன் ரஸ்மின், புத்தளம் மாவட்ட சமாதான நீதவான்கள் பேரவையினால் 2020 ஆம் ஆண்டு "DR CWW KANNANGARA"  விருதும், 2021 ஆம் ஆண்டு இலங்கை சமாதான நீதவான்கள் பேரவையினால் "தேச அபிமானி" கௌரவ பட்டமும், அதே அமைப்பினால் 2022 ஆம் ஆண்டு "தேசகீர்த்தி" கௌரவ பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இளம் ஊடகவியலாளரான Sky News செய்தி முகாமையாளர் ஆர்.எம்.சப்ராஸ், 2022 ஆம் ஆண்டு இலங்கை சமாதான நீதவான்கள் பேரவையினால் "தேசகீர்த்தி" கௌரவப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் முஹம்மது ஆஷிக், 2021 ஆம் ஆண்டு இலங்கை சமாதான நீதவான்கள் பேரவையினால் "தேசகீர்த்தி" கௌரவப் பட்டமும், 2022 ஆம் ஆண்டு "தேச அபிமானி" கௌரவப் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன், முன்னாள் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரிபாஸ் நஸீருக்கு, 2022 ஆம் ஆண்டு இலங்கை சமாதான நீதவான்கள் பேரவையினால் "தேசகீர்த்தி" கௌரவப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post