சவூதி அரேபியாவின் எழுச்சியும் முஹம்மத் பின் சல்மானின் 'சமநிலை' அரசியலும்

மத்திய கிழக்கின் அரசியல் வரைபடம் கடந்த சில ஆண்டுகளில் ஒரு பாரிய மாற்றத்தைச்சந்தித்துள்ளது. 

சவூதி அரேபியா கடந்த காலங்களை விட சர்வதேச விவகாரங்களில் பாரம்பரியக்கொள்கையிலிருந்து மாற்றமாக புதிய கொள்கைகளை உருவாக்கி, இன்று உலகளாவிய விவகாரங்களில் ஒரு தீர்க்கமான மற்றும் தன்னாட்சி பெற்ற சக்தியாக உருவெடுத்துள்ளது. 

இளவரசர் முஹம்மத் பின் சல்மானின்  'விஷன் 2030' மற்றும் அவரது தொலைநோக்கு இராஜதந்திரமே இம்மாற்றத்தின் உந்துசக்தியாகத் திகழ்கிறது.

1.மூலோபாய சுயாட்சி: 

அமெரிக்கா மற்றும் ஈரானுடனான கையாளுதல்

தற்போதைய சூழலில் சவூதி அரேபியா பின்பற்றும் மிக முக்கியமான கொள்கை 'மூலோபாய சுயாட்சி' ஆகும்.

* ஈரானுடனான இணக்கம்: 

சீனாவின் மத்தியஸ்தத்துடன் ஈரானுடன் உறவைச் சீரமைத்தமை பிராந்தியப்பதற்றத்தைக் குறைப்பதில் ஒரு மைற்கல்லாகும். ஈரானை ஒரு எதிரியாகக்கருதுவதை விட, ஒரு பிராந்தியப்பங்காளியாக மாற்றுவதன் மூலமே தன் தேசத்தின், பிராந்தியத்தின் நிலையான அமைதி, பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தி போன்ற தனது கனவுகளை நனவாக்க முடியுமென்று சவூதி நம்புகிறது.

* அமெரிக்காவுடனான புதிய உறவு: 

அமெரிக்கா சவூதி உட்புறவு நீடித்தாலும், சவூதி  அமெரிக்காவின்  அனைத்து முடிவுகளுக்கும் இசைந்து போவதில்லை. குறிப்பாக, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த நினைத்தால், தனது வான்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என சவூதி உறுதியாகத்தெரிவித்துள்ளது. இது சவூதியின் வளர்ந்து வரும் தன்னாட்சி அதிகாரத்தைக் காட்டுகிறது.

2. உலகளாவிய மத்தியஸ்தர் மற்றும் மனிதாபிமான முகம்

உக்ரைன்-ரஷ்யா போர்க்கைதிகள் பரிமாற்றம் முதல் சூடான் உள்நாட்டுப்போர் வரை, சவூதி இன்று ஒரு உலகளாவிய மத்தியஸ்தராகச் செயல்படுகிறது.

 * யேமன் அமைதி முயற்சி: 

யேமனில் பல ஆண்டுகளாக நிலவி வந்த போரை முடிவுக்குக்கொண்டு வர ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் நேரடியாகப்பேச்சுவார்த்தை நடத்தியது சவூதியின் முதிர்ச்சியான அணுகுமுறைக்குச் சான்றாகும்.

 * மனிதாபிமான உதவி: 

'கிங் சல்மான் நிவாரண மையம்' (KSRelief) மூலம் சிரியா, துருக்கி மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பில்லியன் கணக்கான டொலர்களை வழங்குவதன் மூலம் சவூதி ஒரு 'வழிகாட்டும் நாடு' என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.

3. பொருளாதாரப்பன்முகத்தன்மை மற்றும் மென் அதிகாரம் (Soft Power)

எண்ணெய் அல்லாத பொருளாதாரத்தை நோக்கிய சவூதியின் பயணம் பிரமிக்கத்தக்கது.

 * தொழிநுட்பம் மற்றும் AI: 

சவூதி தன்னை ஒரு 'தொழிநுட்ப மையமாக' மாற்றி வருகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் பசுமை எரிசக்தியில் (Green Hydrogen) பெரும் முதலீடுகளைச் செய்து வருகிறது.

 * விளையாட்டு இராஜதந்திரம்: 

2034 பிஃபா உலகக்கோப்பையை நடத்தும் உரிமையைப் பெற்றது மற்றும் சர்வதேச விளையாட்டு முதலீடுகள் மூலம் உலகளவில் தனது பிம்பத்தை (Brand Saudi) மாற்றியமைத்து வருகிறது.

4. இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் தெளிவான நிலைப்பாடு

ஈரான்-அமெரிக்க பதற்றங்களுக்கு மத்தியிலும், சவூதி பாலஸ்தீன மக்களின் உரிமைகளில் சமரசம் செய்து கொள்ளவில்லை. 'சுதந்திரமான பாலஸ்தீன அரசு' உருவாகாமல் இஸ்ரேலுடன் முழுமையான உறவில்லை என்ற அதன் நிபந்தனை, அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் சவூதியின் தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

5. பிரிக்ஸ் (BRICS) மற்றும் புதிய அதிகார சமநிலை

ஜி20 அமைப்பில் செல்வாக்கு அதிகரித்ததுடன், பிரிக்ஸ் (BRICS) போன்ற சர்வதேச கூட்டமைப்புகளில் இணைவதன் மூலம், கிழக்கு (சீனா, ரஷ்யா) மற்றும் மேற்கு (அமெரிக்கா, ஐரோப்பா) நாடுகளுக்கிடையே ஒரு பாலமாகச்செயற்படும் இராஜதந்திரத்தை சவூதி கையாள்கிறது.

சவூதி அரேபியாவின் இந்த எழுச்சி என்பது வெறும் பொருளாதார பலத்தினால் மட்டும் உருவானதல்ல.

மாறாக, அது இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் தீர்க்கமான தலைமைத்துவத்தின் விளைவாகும். 

அமெரிக்கா-ஈரான் போன்ற நீண்டகாலப்பகை நாடுகளுக்கிடையே ஒரு சமநிலைத்தூணாகச் செயற்படும் சவூதி, இனி உலக அமைதியைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய சக்தியாக மாறியுள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) - ஓட்டமாவடி

Post a Comment

Previous Post Next Post