கல்விச் சீர்திருத்தங்களில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை - புத்தளத்தில் பிரதமர் உறுதி!


ரஸீன் ரஸ்மின்

கல்வி மறுசீரமைப்புச் செயல்முறையின் பாரிய மாற்றத்திற்கான பயணத்தில் நாம் ஒருபோதும் பின்வாங்கவில்லை. அவ்வாறு பின்வாங்குவதற்கு நாம் தயாராகவும் இல்லை. ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் திட்டமிட்டபடியே தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (17) புத்தளத்தில் தெரிவித்தார்.

புத்தளம் வலயக் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுடன் நேற்று (17) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதமர் பல முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

புத்தளம் மாவட்ட ஒருங்கமைப்பு கூட்டத்துடன் ஆரம்பமான இந்த விஜயம், அதனைத் தொடர்ந்து புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரி, புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி, திறந்த பல்கலைக்கழகம், மதுரங்குளி வேலாசி பாடசாலை என்பனவற்றுக்கு கண்காணிப்பு விஜயம் செய்ததுடன், புத்தளம் தேசிய மக்கள் சக்தி அங்கத்தவர்களுடன் விசேட கலந்துரையாடலில் பங்கேற்ற பிரதமர், எதிர்கால செயற்பாடுகள், அபிவிருத்தி திட்டங்கள், மேலும் புத்தளம் கல்வி சமூகத்தின் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து விரிவாக கலந்துரையாடினார்.

இங்கு தொடர்ந்தும் பேசிய பிரதமர் மேலும் கூறுகையில்,

ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் திட்டமிட்டபடியே நடைமுறைப்படுத்தப்படும். அதில் எந்த மாற்றங்களும் இல்லை.

இந்த கல்விச் சீர்திருத்தத் திட்டங்கள் நீண்டகாலச் செயல்பாட்டின் மூலம் அடையத் திட்டமிடப்பட்டுள்ளன. அதற்கான உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு, ஆசிரியர்-அதிபர் ஆட்சேர்ப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப உபகரணங்கள் விநியோகம் ஆகியவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான பாரிய செயல்பாட்டின் போது, ஒரு சில குழுக்கள் தமது குறுகிய நோக்கங்களை அடைவதற்காக முன்வைக்கும் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையைத் தொடர்ந்தும் பேண வேண்டும்.

இது பிள்ளைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மற்றும் முழு நாட்டினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு செயல்பாடு என்பதால், இது தொடர்பில் மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது அவசியமாகும். கல்வி மாற்றச் செயல்பாட்டின் விசேட திட்டங்களுக்கு நாம் நிதி ஒதுக்கியுள்ளோம்.

உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட டிஜிட்டல் கல்வி வசதிகளான ஊடாடும் தொடுதிரை (ஐவெநசயஉவiஎந ளஉசநநளெ) மற்றும் இணைய இணைப்புகளை முதற்கட்டமாக முதல் இரண்டு மாதங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

பெற்றோர்கள் கல்வியின் பெறுமதியை நன்கு அறிவார்கள். அவர்கள் தமது அனைத்து வளங்களையும் பிள்ளைகளுக்குத் தரமான கல்வியைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே அர்ப்பணிக்கின்றனர். 

புதிய கல்வி மறுசீரமைப்புகளின் கீழ் கிராமம் மற்றும் நகரப் பாடசாலைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் குறைக்கப்படுவதுடன், 'கஷ்டப் பிரதேச பாடசாலைகள்' என்ற கலாசாரத்தை மாற்றுவதே எமது நோக்கமாகும். 

பல்வேறு துறைகளிலும் அறிவையும் திறமையையும் கொண்ட பிள்ளைகளே நாட்டுக்கு அவசியமாகின்றனர்.

பிள்ளைகளுக்காகச் சிறந்தவற்றையே நாம் செய்ய வேண்டும். எப்போதும் பிள்ளைகளின் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களின் விளைவுகளையே நாம் இப்போது அனுபவித்து வருகின்றோம். 

எனினும், எமக்கு இப்போது ஒரு சிறந்த நிகழ்காலம் உருவாகி இருக்கின்றது. எனவே, இனிவரும் காலங்களில் அரசியல் அல்லது தனிப்பட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை எடுப்பதைத் தவிர்த்து, ஒட்டுமொத்தப் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தீர்மானங்களை எடுக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

புதிய ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது. அதற்கமைய, எதிர்காலத்தில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எத்தகைய பொருளாதார அல்லது சமூகப் பின்னணியைக் கொண்டிருந்த போதிலும், அனைத்துப் பிள்ளைகளுக்கும் தாம் விரும்பிய பாடங்களைக் கற்பதற்குத் தேவையான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

இந்த விஜயத்தில் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன உட்பட தேசிய மக்கள் சக்தி புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், நகர சபை, பிரதேச தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட திணைக்கத் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.



Post a Comment

Previous Post Next Post