இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட ஹட்டன் ஜூம்ஆ மஸ்ஜித் காவலாளி...!

கிரிஷாந்தன்

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி மீது இன்று (09) அதிகாலை நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், பள்ளிவாசலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது.

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் சுமார் இரு வருடங்களாக காவலாளியாக பணியாற்றிவரும் ஹட்டன், ஹிஜ்ராபுரம் பகுதியைச் சேர்ந்த சி.எம். இப்ராஹிம் (வயது - 67) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

அவரின் தலைப்பகுதியிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 "அதிகாலை ஒரு மணியளவில் சுவர் ஏறி குதித்து பள்ளிவாசலுக்கு வந்த நபரொருவர், காவலாளியின் ஓய்வறைக்கு சென்றுள்ளார். பின்னர் வெளியே வந்து உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளார்." என ஹட்டன் பள்ளிவாசலின் நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

பள்ளிவாசலின் உண்டியல் பல தடவைகள் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றாமல் இருப்பதற்காகவே காவலாளி நியமிக்கப்பட்டார் என்று கூறியுள்ளனர்.

 நபர் பள்ளிக்குள் வருவது, உண்டியலை உடைப்பது போன்ற காட்சிகள் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

ஸ்தல பரிசோதனையின் பின்னர் உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுப்பட்டது.

கொலையாளியை கைது செய்வதற்கான விசாரணை, தேடுதல் வேட்டையில் ஹட்டன் பொலிஸார் இறங்கியுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post