கற்பிட்டியில் பெண் கடத்தல்; ஒருவர் கைது...!

ரிபாக்

கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த பெண்ணைக் கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சொகுசுக் கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கற்பிட்டி, பள்ளிவாசல்துறை பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய வர்த்தக பெண் ஒருவர் இன்று (23) அதிகாலை கடத்தப்பட்டுள்ளார்.

காரில் வந்த குழு ஒன்றினாலேயே இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இன்று அதிகாலை குறித்த பெண் கடத்தப்பட்ட காரை ஆனமடுவ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த கார் பாலாவி ஊடாக ஆனமடுவை நோக்கி பயணிப்பதாக கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த காரை மறைக்குமாறு கற்பிட்டி பொலிஸார் சுற்றியுள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த காரை ஆனமடுவ பொலிஸார் மீட்டுள்ளனர். இதன்போது,   காரில் இருந்த ஒருவர் தப்பியோடிய நிலையில், காரை ஓட்டிய சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.

இதேவேளை, ஆனமடுவ, வதத்த பிரதேசத்தில் குறித்த காரின் வேகம் குறைந்த போது  கடத்தப்பட்டதாக கூறப்படும் கற்பிட்டியைச் சேர்ந்த வர்த்தகப் பெண் காரில் இருந்து குதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

காரில் இருந்து தப்பிய குறித்த பெண் மறைந்திருந்த நிலையில் பிரதேசவாசிகளால் கண்டுபிடித்து அவர் ஆனமடுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

குறித்த பெண் கடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில், கைது செய்யப்பட்ட நபரையும், பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட பெண்ணையும் மேலதிக விசாரணைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post