மனைவியை கொலை செய்து புதைத்த கணவன் கைது; முல்லைத்தீவில் பரபரப்பு..!

முல்லைத்தீவு -  நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நீராவிபிட்டி கிழக்கு பகுதியில் சில நாட்களாக வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று தங்கி வந்த இளம்குடும்ப பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டு வீட்டின் பின்பாகவுள்ள மலசலகூடத்திற்கு அருகே குழி தோண்டி புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

(கொலை செய்யப்பட்ட இளம் பெண்)

புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த த.கீதா எனும் 23 வயதுடைய குடும்ப பெண் முள்ளியவளை குமாரபுரத்தை சேர்ந்த 23வயதுடைய ஆணொருவரை திருமணம் முடித்து 

நீராவிபிட்டி கிழக்கு பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் கடந்த மூன்று வாரமாக வசித்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த இளம் குடும்ப பெண் தொலைபேசியில் தனது தாயாரிடம் நாளாந்தம் உரையாடுவதாகவும் கடந்த 21ம் திகதிக்கு பின்னர் மகளின் தொலைபேசி துண்டிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் (23) மகளும் மருமகனும் வசிக்கும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் புதிதாக மண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று காணப்படுவதாகவும் இதனால் சந்தேகம் அடைந்த குறித்த பெண்ணின் தாயாரால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து, குறித்த இளம்பெண்ணின் கணவர் இன்று வெல்லம்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கணவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது மனைவியை கொலை செய்து விட்டு வீட்டுக்கு பின்புறமாக உள்ள மலசல கூடத்திற்கு அருகில் புதைத்துள்ளதாக கூறியுள்ளார்.

கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி K.சங்கீத் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற அகழ்வுப் பணியின் போது சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ, தடயவியல் பொலிசார் விஷேட அதிரடி படையினர், பொலிஸார் ஆகியோர்பிரசன்னமாகியிருந்தனர். SM



Post a Comment

Previous Post Next Post