ரஸீன் ரஸ்மின்
"இன்றைய சேமிப்பு, நாளைய உங்கள் முதலீடு" எனும் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி சேமிப்பு மேம்பாட்டு வேலைத்திட்டம் ஒன்றை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டு, வைப்புத் தொகையை அதிகரிக்கும் நோகங்கில் மேற்படி சேமிப்பு மேம்பாட்டு திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, இம்மாதம் முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இந்த சேமிப்பு மேம்பாட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சமுர்த்தி வங்கிகளிலுள்ள அங்கத்தவர் சேமிப்பு கணக்கு, அங்கத்தவர் அல்லாதோர் சேமிப்பு கணக்கு, திரியமாதா (பெண்கள்) சேமிப்பு கணக்கு, சிறுவர் , சிசுரக சேமிப்பு கணக்கு மற்றும் ஐவரைக் கொண்ட குழு சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் பயனாளிகளிடமிருந்து பணத்தை சேமிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கிராமத்தில் உள்ள மக்களின் சனத்தொகைக்கு ஏற்ப சேமிப்பினை சீர் செய்துகொள்ளவும், மேற்குறிப்பிட்ட கணக்குகளில் செயற்படாத கணக்குகளுக்கு பணத்தை வைப்புச் செய்தல், சிறுவர், சிசுரக கணக்குகளை புதிதாக ஆரம்பித்தல், 'பலப்படுத்தல்' வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு கடன்களை வழங்குதல் என்பனவற்றை வங்கியின் கட்டுப்பாட்டுச் சபையின் அனுமதியுடன் மேற்கொள்ளல் வேண்டும் எனவும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சேமிப்பு செய்யும் அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன. சிறுவர் மற்றும் சிசுரக கணக்குகளுக்கு 500 ரூபாவுக்கு கூடுதலாக வைப்புச் செய்யும் பயனாளிகளுக்கு பொருத்தமான பரிசு வழங்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அங்கத்தவர், அங்கத்தவர் அல்லாதோர் மற்றும் திரியமாதா ஆகிய கணக்குகளுக்கு 1000 ரூபாவுக்கும் மேல் சேமிப்பு செய்யும் பயனாளிகளுக்கும், குழுக்களுக்கு 2500 ரூபா அல்லது அதற்கு மேல் சேமிப்பு செய்யும் குழுக்களுக்கும் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
மேற்படி சேமிப்பு மேம்பாட்டு வேலைத்திட்டத்தில் சேமிக்கப்படும் மொத்த வைப்புத் தொகையுடன் ஒப்பிடும் போது 5 வீதத்தை விட அதிகரிக்காத தொகையினை பரிசாக வழங்கப்படவுள்ளது.
மேற்படி பரிசுத் தொகையை வழங்குவதற்கு வங்கியின் கட்டுப்பாட்டுச் சபை யோசனைகள் மற்றும் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, "கிராமத்திற்கு சுபீட்சம்" எனும் தொனிப்பொருளின் கீழ் இம்மாதம் 17 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் குறித்த வேலைத்திட்டத்தை பயனாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களை தெளிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நுண்நிதிச் சந்தை நடவடிக்கைகளில் சமுர்த்தி வங்கி புதிய புரட்சிகளையும் , மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறுவோர், சிறுவர்கள் மற்றும் பெண்களை இலக்கு வைத்து அவர்களின் தேவைகள் தொடர்பாக நன்கு அறிந்து கவர்ச்சிகரமான வருடாந்த வட்டி வீதம் மற்றும் சலுகை முறைமைகளின் கீழ் கடன் வசதிகளை வழங்கி வருகிறது.
மேலும் சேமிப்பு கணக்குகள் பலவற்றை அறிமுகம் செய்து தற்போது 16 மில்லியனுக்கும் அதிகமாக செயற்படுகின்ற கணக்குகளுடன் சமுர்த்தி வங்கிகள் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
