ரஸீன் ரஸ்மின்
பலஸ்தீன் மக்களின் அனைத்து உரிமைகளும் அந்த மக்களுக்கு வழங்கப்பட்டு , அங்கு நிரந்தர சமாதானம் உருவாக வேண்டி அதிகம் அதிகமாக பிரார்த்தனை செய்வோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
புத்தளம் - லயன்ஸ் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலமாக்கள் - ஹாபிழ்களுக்கிடையில் அகில இலங்கை ரீதியிலான இரவு , பகல் கிரிக்கெட் சுற்றுப்போட்டி முந்தல் , அக்கரவெளி எவர் கிரீன் விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (14) இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம். ஆஷிக், பைசர் மரிக்கார், எச்.முஹம்மட் சிபான் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
மேற்கத்தேய நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆயுத பலத்தையும், பண பலத்தையும் ஒன்று சேர்த்து பலஸ்தீன் மக்களை தாக்கி, அநியாயம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சிறுவர்கள், வயோதிபர்கள் , கரப்பிணித் தாய்மார்கள் என்றுகூட பார்க்காமல் எந்த உள்ளங்களும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அந்த மக்களை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
உண்பதற்கு உணவு இல்லாமல், குடிப்பதற்கு குடிநீர் இல்லாமலும் , தமக்குத் தேவையான மருத்துவ வசதி மற்றும் மின்சார வசதி இல்லாமலும் அந்த மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இந்த போரின் உச்சத்தால் தமது குடும்பங்களை, உறவுகளை இழந்து வேதனைப்படுகிறார்கள்.
காஸா மீதான இஸ்ரேல் முன்னெடுக்கும் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்தும், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் வெள்ளிக்கிழமை இலங்கையில் மாத்திரமன்றி, உலக நாடுகளிலும் உள்ள முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
எனவே, பலஸ்தீன மக்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்த மக்களுக்கு எதிராக இஸ்ரேல் முன்னெடுக்கும் காட்டுமிராண்டித்தனமான வன்முறைகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தின் ஊடாக எங்களால் முடிந்த அளவில் அழுத்தங்களை வழங்கி வருகிறோம்.
மாத்திரமின்றி, பல தசாப்தங்களாக யூதர்களால் கையகப்படுத்தி வைத்திருக்கும் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதஸ்தலமான மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் அந்த மக்களின் நிலம், சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அந்த மக்களுக்கு வழங்கப்பட்டு நிம்மதியான, நிரந்தர சமாதானம் அங்கு உருவாக வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.
எனவே, பலஸ்தீன மக்களது வெற்றிக்காகவும், மஸ்ஜிதுல் அக்ஸாவின் விடுதலைக்காகவும் நோன்பு நோற்று, அதிகம் அதிகமாக துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடுமறும் இலங்கை முஸ்லிம் மக்களிடத்தில் அன்பாக கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

