ஆர்.ரஸ்மின்
புத்தளம் நகர சபை தலைவர் எம்.எஸ்.எம்.ரபீக் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் புத்தளம் நகர சபை தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எம்.எஸ்.எம்.ரபீக், புத்தளம் நகர சபைக்காக மு.காவின் மரச் சின்னத்தில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
அப்போது புத்தளம் நகர சபை மு.காவின் வசமானது. முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸ் புத்தளம் நகர சபையின் தலைவராக பதவியேற்றிருந்தார்.
இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி புத்தளம் - வன்னாத்தவில்லு பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் மரணமானார்.
இதன்போது, புத்தளம் நகர பிதா வெற்றிடத்திற்கு பலத்த போட்டிகள் நடைபெற்ற போதிலும் , பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் நகர சபை உறுப்பினரான எம்.எஸ்.எம்.ரபீக் 2021 ஜூலை முலதாம் திகதி புத்தளம் நகர சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்டுப்பாட்டில் உள்ள புத்தளம் நகர சபையின் தலைவராக பதவி வகித்து வந்த எம்.எஸ்.எம .ரபீக், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மு.காவிலிருந்து விலகி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து டெலிபோன் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.
இந்த பின்னணியிலேயே புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக், கட்சி அரசியலமைப்பை அப்பட்டமாக மீறிவிட்டார் என்று அக்கட்சியின் செயலாளர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
"நீங்கள் புத்தளம் நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி, போட்டியிட தீர்மானித்துள்ளதாக கடந்த கட்சி உயர்பீடத்தில் கட்சி மற்றும் தலைமையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
2023 புத்தளம் நகர சபைத் தேர்தலில் சமகி ஜன பலவேகய என்ற மற்றொரு அரசியல் கட்சியின் வேட்பாளராகவும் போட்டியிடுகிறீர்கள்.
உங்களின் இந்த நடத்தை கட்சி அரசியலமைப்பை அப்பட்டமாக மீறுவதாகும். நீங்கள் வேறு ஒரு அரசியல் கட்சியில் அங்கத்துவம் பெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அங்கத்துவத்தை நிறுத்திவிட்டீர்கள் என்றும் அக்கட்சி குறிப்பிடுகிறது.
இந்நிலையில், கட்சி உயர்பீடமும், தலைமையும் உங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையை இழந்த நபராக எனக்கு அறிவிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளது.
நிசாம் காரியப்பர்
(ஜனாதிபதி சட்டத்தரணி)
செயலாளர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
பிரதி:
தேர்தல் அதிகாரி.
புத்தளம் நகர சபை.
தேர்தல் அலுவலகம்,
புத்தளம்.
குறிப்பு: புத்தளம் நகர சபையின் தற்போதைய தலைவரான எம்.எஸ்.எம்.ரபீக் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக இருந்து விலகிவிட்டார் என்பதையும், எனவே அவரது புத்தளம் நகரசபை உறுப்பினர் பதவி வெற்றிடமாகிவிட்டதாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கவும்.
என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
