தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அல்ல என்பதால் சமஷ்டி, அல்லது 13ஐ முழுமையாக செயல்படுத்தும் பொலிஸ், காணி அதிகாரம் வழங்குதல் போன்ற முயற்சிகளை கைவிட்டு நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதுபற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில் ஏற்பட்ட அரகலய போராட்டம் என்பது நாட்டின் இனப்பிரச்சினையை தீர்க்கும்படியான போராட்டம் அல்ல. மாறாக கோட்டாபயவின் கர்வமிக்க, ஆலோசனையற்ற பிழையான ஆட்சி காரணமாக ஏற்பட்ட மோசமான பொருளாதார பிரச்சினையே காரணமாகும்.
கோட்டாபயவினால் நியமிக்கப்பட்டு பின்னர் பாராளுமன்றின் மூலம் தெரிவு செய்யப்பட்ட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களின் பொருளாதார பிரச்சினைகளை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை காண்கிறோம். அவரால் இது விடயத்தில் மேலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் எமக்கு உண்டு.
ஆனால் நாட்டின் பொருளாதார வறுமையை சந்தர்ப்பமாக பயன்படுத்தி சில தமிழ் இனவாத கட்சிகளும் தமிழ் அமைப்புக்களும் 13ஐ முழுமையாக அமுல்பத்தும்படியும் சமஷ்டி என்றும் போராட்டங்களை முன்னெடுத்தன. இது ஒரு பெண்ணின் வறுமையை பயன்படுத்தி அவளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தும் அகோர செயலாகும்.
இந்த நிலையில் எப்பிரச்சினை காரணமாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டாரோ அதனை தீர்ப்பதை விடுத்து இனப்பிரச்சினைக்கான தீர்வு, 13ன்படி காணி அதிகாரம் வழங்கல் போன்ற தற்போதைக்கு தேவையற்ற பிரச்சினைக்குள் தன்னை நுழைத்துள்ளமையை காண்கிறோம்.
இப்பிரச்சினைகளை தீர்க்கும் படி ஜனாதிபதி தேர்தல் மூலம் நாட்டு மக்களோ, குறிப்பாக தமிழ் மக்களோ ரணிலுக்கு வாக்களிக்கவில்லை என்பதையும் பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி வழங்கப்பட்டது என்பதையும் புரிந்து நாட்டை மேலும் முன்னேற்ற நடவடிக்கை எடுக்கும் படி ஐக்கிய காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொள்கிறது.
