சகோதரர் அப்துல்லாஹ் அஸாம்.
அவரது சடுதியான மரணம் பலரை பல்வேறு விதங்களின் பாதித்திருக்கிறது.
ஜமா அத் அலுவலகத்தில் சுபஹுக்கு இமாமாக நின்று தொழுவித்து இறைவன் அழைப்பு வருவதற்கு சில கணங்கள் முன்னரும் கணணியில் தன் பணியில் மூழ்கியிருந்தாராம்.
வாழ்க்கை மரணத்துக்கு அப்பாலும் தொடர்கிறது என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை. ஆன்மா தன்னை உடலின் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு எல்லைகளற்ற ஒரு வெளி நோக்கிச் செல்லும் அபூர்வமான பயணம் மெளத்து.
ஆனாலும் பிரிதலின் வேதனையும் கண்ணீரும் நிஜம்.
அவரைப் பற்றிச் சொல்வதானால் அல்ஹஸனாத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். முதன் முதல் என் ஆக்கம் அல்ஹஸனாத்தில் வந்த போது நான் பாடசாலையில் உயர்தரம் முதலாண்டில் இருந்தேன். அப்போது மர்ஹும் எஸ் .எம் மன்சூர் அதன் ஆசிரியராக இருந்தார் என்று நினைக்கிறேன்.
அப்போதிலிருந்து தொடர்ச்சியாக என் எழுத்துக்களை அல்ஹஸனாத் தாங்கி வந்தது. அல்ஹஸனாத் மூலமே என் பெயர் பலருக்குப் பரீட்சயம் ஆனது. என்னை விரும்பி வாசிக்கும் வாசகர் வட்டமொன்றும் உருவானது. அதை நான் எப்போதும் நன்றியுடன் நினைவுபடுத்துவேன். இடைக் காலத்தில் அஸாம் பிரதர் சஞ்சிகையின் பிரதி ஆசிரியராக இருந்தார்.
ஒரு முறை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பரிசு பெற்ற என் கவிதை ஒன்றை அல்ஹஸனாத்தின் கவிதைப் பகுதிக்கு அனுப்பியிருந்தேன். மெளதூதி என்ற கவிதைப் பகுதிப் பொறுப்பாளர் அதை அவர் மனம் போனவாறு மாற்றித் திருத்திப் பிரசுரித்திருந்தார்.
ஈ மெயில் வந்திருக்காத காலம். போராட்டக் குணமும் அசாதார துணிச்சலும் கொண்ட இளம் பருவம். ‘என் கவிதையை செதுக்குவதாகச் சொல்லிக் கொண்டே சிதைத்த மெளதூதி யார் ‘ என்று தலைப்பிட்டு ஒரு நீண்ட மடலை ஆசிரியர் பீடத்துக்கு அனுப்பினேன். இடையில் மெளதூதியும் எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார். என் சரியான கவிதையும் கடிதமும் அடுத்த இதழில் பிரசுரமாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அது பிரசுரமாகவில்லை. மாற்றமாக ஆசிரியர் பீடத்திலிருந்து கொஞ்சம் காரசாரமான கடிதம் வந்தது. அதன் பின்னாலிருந்தவர் அஸாம் பிரதர் என்று அறிந்தவுடன் அவரைக் காணாமலே ஒரு விரோதவுணர்வு என்னில் முளை விட்டு விட்டது. அது தான் அவரின் முதல் அறிமுகம்.
பின்னர் சில ஆண்டுகளுக்குப் பின்னர் ‘எங்கள் தேசம்’ பத்திரிகை ஆரம்பிக்கப்ட்ட போது வாப்பாவுக்கு அழைப்பெடுத்து பின்னர் என்னுடன் பேசினார். ‘பெண்கள் தேசம்’ பகுதியைப் பொறுப்பெடுத்துச் செய்ய முடியுமா என்ற கேள்வியுடன் பத்திரிகை நோக்கம் பற்றியும் தெளிவுபடுத்தினார். ஆறுதலாக அவர் பேசிய தொனியும் நான் அவரை உருவகப்படுத்தி வைத்திருந்ததும் இரண்டாக இருந்தது. அஸாம் பிரதருடனான இரண்டாவது சந்திப்பு அது.
என்னுடைய நீண்ட இதழியல் பயணத்துக்கு அங்கு தான் பிஸ்மில்லாஹ் சொல்லப் பட்டது.
பிற்காலத்தில் இதழியலை முறையாகக் கற்கவும் துறையாகக் கொள்ளவும் எங்கள் தேச அனுபவம் தளமாக அமைந்தது.
அனுபவங்கள் எல்லாம் ஒரே மாதிரியானவை அல்ல.
அவை கசப்பும் இனிப்பும் கலந்தவை.
நான் மாய்ந்து எழுதும் சில ஆக்கங்கள் தணிக்கை செய்யப்படுவது என்னை வெகுவாகப் பாதித்தது. மலேசியப் பாராளுமன்ற உறுப்பினர் மாரியா மஹ்மூத் இலங்கை வந்திருந்த போது அவரை நேர்காணல் செய்திருந்தேன். அதில் மிக முக்கியமான இரு கேள்விகளும் அதற்கு மாரியா சொன்ன பதில்களும் சஞ்சிகையில் வெளிவரவில்லை.
அவருக்கும் ஆசிரிய பீடத்துக்கும் அதற்கான நியாயங்கள் இருந்திருக்கலாம்.
ஆனால் எனக்கு அது உடன்பாடாக இருக்கவில்லை. சில வேளை, நேரடியாக ஒரே அலுவலகத்தில் அவருடன் பணியாற்றி இருந்திருந்தால் அவரது மற்றப் பக்கங்களையும் அறிந்து கொள்ள எனக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும்.
அஸாம் பிரதருடனான உரையாடல்களில் எப்போதும் நெகிழ்வுத் தன்மை இருக்கும். பேசும் விதத்தில் நமக்கு ஒரு சண்டையைப் பிடிக்கத் தோணாது.
அவர் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக நூறு சதவீதம் உண்மையாக இருந்திருக்கிறார் என்று அவரைப் பற்றிய பதிவுகளிலிருந்து தெரிந்து கொண்டேன். இயக்கப் பணிகளுக்காக மொத்த வாழ்வையும் தன்னுடைய கடைசி நிமிடங்களைக் கூட அர்ப்பணித்திருக்கிறார் என்பதன் விலை மிக மிக அதிகம். அதற்கான நற்கூலி நிரப்பமாக அவரை அடையட்டும்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்ளட்டும்.
அடர்ந்த மரங்களும் ஒலித்தோடும் ஆறுகளும் கொண்ட அழகிய சுவர்க்கத்தில் அவரது ஆன்மா ஒரு புறாவைப் போல சிறகடிக்கட்டும்.
அவர் பிரிவில் கலங்கியிருக்கும் அவரது துணைவிக்கும் பிள்ளைகளுக்கு இறைவன் நிறைந்த ஆறுதலையும் அழகிய பொறுமையையும் தர என் இதயபூர்வமான பிரார்த்தனைகள்!!
📝 ஷமீலா யூசுப் அலி
