நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடள் நிறைவுப்பெற்றுள்ள நிலையில், புத்தளம் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு அரசியல் கட்சிகள் மற்றும் மூன்று சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்தார்.
வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவுபெற்ற பின்னர், அதன் பெறுபேறுகளை அறிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, ஒரு நகர சபை உட்பட பத்து பிரதேச சபைககளுக்காக அங்கீகரிக்கப்பட்ட பல அரசியல் கட்சிகள் உட்பட சுயேட்சைக்குழுக்களும் தமது வேட்புமனுத் தாக்கலை செய்திருந்தன.
இதன் அடிப்படையில், வென்னப்புவ பிரதேச சபைக்காக 4 அரசியல் கட்சிகளும், 6 சுயேட்சைக் குழுக்களும், நாத்தாண்டிய பிரதேச சபைக்காக 5 அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைக்குழுக்களும், சிலாபம் நகர சபைக்காக 4 அரசியல் கட்சிகளும், ஆனமடுவ பிரதேச சபைக்காக 5 அரசியல் கட்சிகளும், 1 சுயேட்சைக் குழுவும், நவகத்தேக பிரதேச சபைக்காக 6 அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சைக் குழுவும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைக்காக 6 அரசியல் கட்சிகளும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.
மேலும், கருவலகஸ்வௌ பிரதேச சபைக்காக 6 அரசியல் கட்சிகளும், 1 சுயேட்சைக் குழுவும், வன்னாத்தவில்லு பிரதேச சபைக்காக 7 அரசியல் கட்சிகளும், 4 சுயேட்சைக் குழுக்களும், புத்தளம் பிரதேச சபைக்காக 11 அரசியல் கட்சிகளும், 4 சுயேட்சைக் குழுக்களும், கற்பிட்டி பிரதேச சபைக்காக 8 அரசியல் கட்சிகளும், 8 சுயேட்சைக் குழுக்களும், சிலாபம் பிரதேச சபைக்காக 6 அரசியல் கட்சிகளும், புத்தளம் மாநகர சபைக்காக 8 அரசியல் கட்சிகளும், 4 சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம், மூன்று சுயேட்சைக் குழுக்களும் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வென்னப்புவ பிரதேச சபைக்காக ஐக்கிய தேசியக் கட்சி தாக்கல் செய்த வேட்புமனும், சிலாபம் மற்றும் வன்னாத்தவில்லு ஆகிய பிரதேச சபைகளுக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தாக்கல் செய்த வேட்புமனுக்களும் இதன்போது நிராகரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், புத்தளம் பிரதேச சபைக்காக தாக்கல் செய்த 4 சுயேட்சைக் குழுக்களில் இரண்டினதும், கற்பிட்டி பிரதேச சபைக்காக தாக்கல் செய்த 8 சுயேட்சைக் குழுக்களின் ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்புமனுவும் இதன்போது நிராகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், கற்பிட்டி பிரதேச சபைக்காக அருணலு ஜனதா பெரமுன தாக்கல் செய்த வேட்புமனுவில் இரண்டு வேட்பாளர்களின் பெயர்களும் இதன்போது நிராகரிக்கப்பட்டுள்ளன.
உரிய நேரத்தில் வேட்புமனு விண்ணப்பத்தை கையளிக்காமை, சரியான முறையில் படிவத்தை முறைப்படி பூர்த்தி செய்யாமை , சத்தியக்கடதாசி இணைக்கப்படாமை உள்ளிட்ட சில காரணங்களுக்காகவே மேற்படி கட்சிகளினதும், சுயேட்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான எச்.எம்.எஸ்.பி.ஹேரத் மேலும் தெரிவித்தார்.
