கோழி இறைச்சிக் கடைக்குள் அதன் உரிமையாளர் திடீரென உயிரிழப்பு - புத்தளத்தில் சோகம்

புத்தளம் 21

புத்தளம் வான் வீதியில் உள்ள கோழி இறைச்சி விற்பனை நிலையத்திற்குள் இருந்து அந்தக் கடையின் உரிமையாளர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புத்தளம் வான் வீதியைச் சேர்ந்த பி.எம்.ஜனாப் (வயது 63) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளரான உயிரிழந்த நபர் வழமை போன்று இன்று சனிக்கிழமை காலை வர்த்தக நடவடிக்கைக்காக கடையை திறந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், குறித்த நபர் நண்பகல் மதிய உணவுக்காக வீட்டிற்கு வருகை தராததை அடுத்து, குடும்பத்தினர் மேற்படி கோழி இறைச்சி விற்பனை நிலையத்திற்கு சென்று பார்த்துள்ளனர்.

இதன்போது குறித்த நபர் விற்பனை நிலையத்திற்குள்  உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, சம்பவம் பற்றி புத்தளம் பொலிஸாருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அத்துடன், புத்தளம் மாவட்ட நீதவான் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து நீதிவான் விசாரணை முன்னெடுத்ததுடன், பிரேத பரிசோதனைக்காக ஜனாஸாவை புத்தளம் தள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர் இவ்வாறு திடீரென உயிரிழந்துள்ளமை அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உயிரிழந்த கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளரான பி.எம்.ஜனாப், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் மைதுனர் (சகோதரியின் கணவர் ) என்பது குறிப்பிடத்தக்கது.

-சாஹிப்-









Post a Comment

Previous Post Next Post