புத்தளம் - ரத்மல்யாய விபத்தில் ஆலங்குடாவைச் சேர்ந்த வயோதிப பெண் மரணம்



புத்தளம்  22

புத்தளம் - ரத்மல்யாய பகுதியில் இன்று (22) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வீதிவிபத்துச் சம்பவத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கற்பிட்டி – ஆலங்;குடா பி முகாமைச் சேர்ந்த அசனார் லெப்பை பக்கீர் சாஹிப் மைமூன் (வயது 71) எனும் சிறுவர்களுக்கு கை வைத்தியம் செய்துவந்த வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரத்மல்யாய பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணிப்பதற்காக வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்த குறித்த வயோதிப பெண் மீது தனியார் பயணிகள் பஸ் ஒன்று முன்பக்கமாக மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது விபத்து சம்பவம் இடம்பெற்ற இடத்திலேயே குறித்த வயோதிப பெண் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த வயோதிப பெண்ணின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று புத்தளம் பொலிஸில் சரணடைந்துள்ள நிலையில், அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த பஸ் பொலிஸ் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முஹம்மட் ரிபாக், புத்தளம் நிருபர்



Post a Comment

Previous Post Next Post