கொழும்பு 22
2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் 2,200 நிலையங்களில் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக மேலும் 10 நிமிட நேரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்டுரை வினாத்தாளுக்கான 3 மணித்தியால கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னர் மேலதிகமாக 10 நிமிடங்களை மாணவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத திணைக்களம் இணைந்து பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு நாளைய தினம் முதல் நாடளாவிய ரீதியில் 1,617 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, உயர்தரப் பரீட்சை காலத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதிக உற்பத்திச் செலவு மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்தும் மின்வெட்டுகளை அமுல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளைய தினம் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் RJS தமிழ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
