புத்தளம் 28
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆட்சியை தீர்மானிக்கின்ற ஒரு சக்தியாக ஐக்கிய காங்கிரஸ் கட்சி இருக்கும் என அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸப்வான் சல்மான் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் புத்தளம் - உளுக்காப்பள்ளம் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக எமது ஐக்கிய காங்கிரஸ் கட்சி பதிவு செய்யப்பட்ட பின் சந்திக்கின்ற முதலாவது தேர்தல் இதுவாகும்.
எமது கட்சிக்கு நாடளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பல புதியவர்கள் எங்களை தேடிவந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட தமது விருப்பங்களை தெரிவித்து வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்திலும் எமது ஐக்கிய காங்கிரஸ் கட்சி மூன்று சபைகளில் போட்டியிடுகின்றன.
புத்தளம், கற்பிட்டி பிரதேச சபைகள் மற்றும் புத்தளம் மாநகர சபை ஆகிய மூன்று சபைகளில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எங்களால் ஆட்சியமைக்க முடியாவிட்டாலும், ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக எமது கட்சி இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
இன்று அரசியல் ஒரு வியாபாரமாக மாறியிருக்கிறது. போலி வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை கொள்ளையடித்துச் செல்லும் அரசியல் கலாச்சாரம் தலைதூக்கியிருக்கிறது.
எனவே, இந்த விடயத்தில் எமது மக்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். இதுவரை காலமும் பலருக்கு சந்தர்ப்பம் வழங்கிய மக்கள் இம்முறை எமது கட்சி ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
மக்கள் விரும்பும் வேட்பாளர்களையே நாங்கள் இந்த தேர்தலில் களமிறக்கியுள்ளோம். எமது கட்சியில் களமிறக்கப்பட்ட வேட்பாளர்கள் வெற்றிபெற்றால் மக்கள் ஆட்சியை உருவாக்க முடியும். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
எந்த கட்சி உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சி அமைத்தாலும் மக்கள் நலன்சார் விடயங்களுக்காக ஆதரவு வழங்குவோம். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து விடயங்களையும் கண்டிப்பாக எதிர்ப்போம் என்றார்.
- சாஹிப் -
