கொழும்பு 28
மன்னார், கொண்டச்சியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட எமது கட்சியின் முதுசம் அன்புச் சகோதரர் லாபிர் மெளலவியின் மறைவு மிகவும் வேதனையளிப்பதாகவும் அவரது இழப்பு தாங்கமுடியாத பேரிழப்பாகும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அனுதாபச் செய்தியில்,
“எமது அரசியல் பயணத்தில் ஆரம்பம் தொட்டு இன்றுவரை, சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக, சகல விடயங்களிலும் பங்காளியாக தொழிற்பட்ட ஒரு பெறுமதியான ஆத்மாவை இன்று இழந்து நிற்கின்றோம்.
யுத்தத்திற்குப் பின்னரான முஸ்லிம்களின் மீள்குடியேற்றச் செயற்பாடுகளில் குறிப்பாக, முசலி பிரதேச மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்.
குறிப்பாக, கொண்டச்சி கிராமத்தின் மீள்குடியேற்றம், காணி வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்தல், வீடமைப்புப் பணிகள், பாடசாலை தரமுயர்வு மற்றும் அபிவிருத்திகள், சமய - சமூக செயற்பாடுகள் என கட்சி முன்னெடுத்த சகல நடவடிக்கைகளிளும் முன்னின்று பாடுபட்டவர்களில் மர்ஹூம் லாபிர் மௌலவி அவர்களின் பங்கு அளப்பரியது.
அவரின் இழப்பு நம் அனைவருக்கும் ஜீரணிக்க முடியாத ஒரு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர் கட்சி, அரசியலுக்கு வெளியே ஏனைய சக மனிதர்களோடு மத, மொழி வேறுபாடின்றி மிகவும் நெருக்கமாக பழகும் சுபாவமும் இயல்பும் கொண்டவராவார்.
இம்முறை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கட்சியின் சார்பில் முசலி பிரதேச சபைக்கான, கொண்டச்சி, கரடிக்குளி வட்டார வேட்பாளராக அவர் களமிறக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் திடீர் மரணம் மிகவும் வேதனையளிக்கின்றது.
சகோதரர் லாபிர் மௌலவியின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் மன ஆறுதலையும், பொறுமையையும் வழங்க வேண்டும் என எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதோடு, அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா எனும் உயர்மிகு சுவனத்தை வழங்குவாயாக! அன்னாரின் பாவங்களை மன்னித்து, மறுமை வாழ்வை வெற்றியானதாக ஆக்குவாயாக! ஆமீன்..!"
- ஊடகப்பிரிவு-
