நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் தற்போது 734 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சுமார் 3,000 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளம் - திபெத் எல்லை அருகே கடந்த 26 திகதி ஏற்பட்ட பனிச்சரிவு போடேகோஷி நதியில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது.
மத்திய நேபாளத்தை புரட்டிப்போட்ட வரலாறு காணாத இந்த பேரழிவு நூற்றுக்கணக்கானோரின் உயிர்களை காவு வாங்கி விட்டது. நேற்று வரை 600-க்கும் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டன.
இது நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இன்று மேலும் பலரது உடல்கள் மீட்கப்பட்டதால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளது.
இடிபாடுகள் மற்றும் சேற்றுக்குவியலில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் குவிந்துள்ளன. இதனால் புதிதாக வரும் உடல்களை வைக்க இடம் இல்லாமல் வைத்தியசாலை நிர்வாகங்கள் தவித்து வருகின்றன.
எனவே தற்காலிக பிணக்கிடங்குகள் உருவாக்கப்பட்டு உடல்களை சேமிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது.
அதேநேரம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இன்னும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பற்றிய தகவல் இல்லை. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மாயமானவர்களில் தமிழர்கள் உள்பட 167 இந்தியர்களும் அடங்கியிருப்பதால் இந்தியாவிலும் தொடர்ந்து சோகம் நிலவி வருகிறது.
இதற்கிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் 5-வது நாளாக இன்றும் முழு வீச்சில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது.
இரவு-பகலாக நடந்து வரும் இந்த மீட்புப்பணிகளில் நேபாள ராணுவத்தினர் 5 ஆயிரம் பேர் உள்பட 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் நேற்று வரை 4,451 பேரை மீட்டுள்ளனர்.
