ரஸீன் ரஸ்மின்
புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ரத்மல்யாய கிராம சேவகர் பிரிவில் உள்ள முல்லை ஸ்கீம் மஸ்ஜிதுக்கு பின்னால் மிக நீண்ட காலமாக மின்சார வசிதியின்றி இருளில் வசித்து வந்த குடும்பங்களுக்கு இலவசமாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
பின்தங்கிய கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் இரவு நேர பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் இலக்காக கொண்டு புதிய மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல குடும்பங்கள் நன்மையடைய உள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஆசிரியர் ஐ.எம்.கியாஸ் எடுத்த முயற்சியின் பயனாக 4 மாதங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்காக அரசினால் ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு பின்பக்கமாக வாழும் குடும்பங்கள் மூன்று வருடங்களுக்கும் மேல் மின்சார வசதியின்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
மேலும் குறித்த கிராம மக்கள் மின்சார வசதியை பெறுவதற்காக பல வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அந்த முயற்சிகள் எதுவும் பயனளிக்காத நிலையில், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எம்.கியாஸ் ஆசிரியரின் முயற்சியால் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
இதன் மூலம் இருளில் இருந்த மக்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாகியுள்ளதுடன், மாணவர்களின் இரவு நேர கற்றல் செயற்பாடுகளுக்கும் பெரும் உதவியாக காணப்படுகிறது.
இவ்வாறு புதிதாக மின்சார இணைப்பை பெற்றுக் கொடுப்பதற்கு சகல வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல், மாகாண சபையின் மின்சார விநியோகத்திற்கு பொறுப்பான உதவி நிறைவேற்றுப்பணிப்பாளர் திருமதி கயானி, ரத்மல்யாய கிராம சேவகர் பாத்திமா தௌபீகா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பார்த்தீபன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் றினோஸா உட்பட ரத்மல்யாயகிராம சேவகர் பிரிவில் உள்ள பிரஜா சக்தி உறுப்பினர்கள் என அனைவருக்கும் இக்கிராம மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.


