அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபைக் கூட்டம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (15) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
டித்வா சூறாவளிக்குப் பின்னர் மக்களின் இயல்பு வாழ்வை மீட்டெடுக்கத் தேவையான கொள்கை முடிவுகள் மற்றும் நிறுவன வழிகாட்டுதல்கள் இதன்போது வழங்கப்பட்டன.
தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டு பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தைத் திருத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட சபை அறிக்கைக்கு இங்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான நிரந்தரத் தீர்வைக் காணும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், தரவுகளைச் சேகரித்தல், காலத்திற்கு ஏற்றவாறு சட்டங்களை மறுசீரமைத்தல் மற்றும் நடைமுறை சாத்தியமான திட்டத்தை செயல்படுத்துதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
