சாஹிப் அஹ்மட்
புத்தளம் மாவட்ட சமாதான நீதவான்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட ஒன்றுகூடலும், இப்தார் நிகழ்வும் நேற்றுமுன்தினம் (23) ஞாயிற்றுக்கிழமை புத்தளம் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
அமைப்பின் புத்தளம் மாவட்ட பணிப்பாளரும், ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தருமான எச்.எம்.எம்.சபீக் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாகாண பணிப்பாளர் எம்.எஸ்.எம்.முஸம்மில் உட்பட அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்ட 50 இற்கும் மேற்பட்ட புத்தளம் மாவட்ட சமாதான நீதவான்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது புத்தளம் மாவட்ட சமாதான நீதவான்கள் அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் சமாதான நீதவான்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன.
சமாதான நீதவான்களுக்கான செயலமர்வு மற்றும் சமூக மட்ட விழிப்புணர்வு செயலமர்வுகள் உள்ளிட்ட விடயங்களை முன்னெடுப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டன.
மேலும், புத்தளம் மாவட்ட சமாதான நீதவான்களின் தகவல்கள் அடங்கிய விபரத் திரட்டு புத்தகம் வெளியிடுதல், மக்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் சமாதான நீதவான்களை கௌரவித்தல் அமைப்பின் உத்தியோகபூர்வ டீ சேர்ட் அறிமுகம் செய்து வைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இப்தார் நிகழ்வும் ,விஷேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் நகர கிளை தலைவர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.ஜிப்னாஸ் (மிஸ்பாஹி) அவர்களினால் இந்த துஆப் பிரார்த்தனை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.