புத்தளத்தில் அதிக உப்பு விளைச்சளால் உப்பு விலை குறைந்தது!


ரஸீன் ரஸ்மின்

கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக புத்தளத்தில் பாதிக்கப்பட்ட உப்பு அறுவடை, தற்போதைய வறண்ட வானிலை காரணமாக உப்பு விளைச்சல் அதிகமாக காணப்படுகின்ற போதிலும் உப்பின் விலை குறைந்துள்ளமை தமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் உப்புத் தேவையில் 50 வீதம் முதல் 55 வீதம் வரை புத்தளம் மாவட்டத்தின் புத்தளம், முந்தல், மங்கள எளியா, பாலவி, தளுவ, கற்பிட்டி மற்றும் வன்னாத்தவில்லுவ ஆகிய பகுதிகளிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும் தற்போது சுமார் 10,000 ஏக்கர் நிலத்தில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உப்பு உற்பத்தியில் சுமார் 1,000 விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

புத்தளத்தில் உப்பு உற்பத்தி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன. இதற்கு ஒரு சான்று என்னவென்றால், மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ஆய்வாளரான இப்னு பதூதா 1304 முதல் 1368 வரை உலகம் முழுவதும் மேற்கொண்ட பயணங்களின் போது இலங்கைக்கும் விஜயம் செய்திருந்தர். இவர், புத்தளம் நகரிலும் இப்னு பதூதா தங்கியதுடன், புத்தளம் உப்புத் தொழில் குறித்து அவர் பல குறிப்புகள் எழுதியதாகக் கூறப்படுகிறது.

புத்தளத்தில் உப்புத் தொழிலின் நீண்டகால வரலாறு இவ்வாறு ஆதாரங்களுடன் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான் 'புத்தளத்தின் உப்பு சக்கரை போன்றது' என்ற பழமொழி நாட்டுப்புறக் கதைகளில் சொல்லப்படுகிறது. எனவே, உப்புத் தொழிலுடன் மிகவும் பின்னிப்பிணைந்த ஒரு வரலாற்றை புத்தளம் கொண்டுள்ளது.

சில தசாப்தங்களுக்கு முன்பு குளத்தில் இறால் வளர்ப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட இறால் தொட்டிகளை உற்பத்தியாளர்கள் உப்பு உற்பத்திக்காக மாற்றியுள்ளனர்.

இறால் வளர்ப்பில் பல்வேறு நோய்கள் மற்றும் அதிக செலவுகள் ஏற்படும் நிலையில் சில இறால் வளர்ப்பாளர்கள் அதை மேற்கொள்ளத் தயங்குவதால்  இறால் வளர்ப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட இறால் தொட்டிகளை உப்பு வளர்ப்பிற்குப் பயன்படுத்த ஆரம்பித்துள்னர்.

மேலும், குறைந்த மூலதனத்துடன் சரியான வறண்ட வானிலை நிலவும் மாதங்களில் வளமான உப்பு அறுவடையைப் பெறவும், நல்ல வருமானத்தைப் பெற முடியும் என்பதன் காரணமாக உப்புத் தொழிலை ஆரம்பித்தனர் இருப்பினும், புத்தளம் மாவட்டத்தில் அண்மையில் பெய்த  மழையால், உப்பு அறுவடை எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை.

புத்தளம் மாவட்டத்தில் பெய்த மழை, நாட்டின் பிற பகுதிகளிலும் பெய்தது. இவ்வாறு நாடு முழுவதும் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால், இந்தியாவின் குஜராத்தில் இருந்து உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இருப்பினும், புத்தளம் உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது உப்பு அறுவடை தற்பொழுது நடைபெற்று வருகிறது, உப்பு உற்பத்தியாளர்கள் 50 கிலோ இந்திய உப்பை 4,000 ரூபாவுக்கு வாங்கும் அதே வேளையில், புத்தளத்தில் 50 கிலோ உப்பு மூட்டையின் விலை 1,800 முதல் 2,000 வரை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரனீஸ் பதுர்தீன் கூறுகையில்,

'புத்தளத்தில் உப்பு அறுவடை தற்போது நடைபெற்று வருகிறது. உப்பை அறுவடையை செய்ய உப்பு உற்பத்தியாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். நல்ல வெப்பமும் உப்பு உற்பத்திக்கு பெரும் பங்களிப்பை தருகிறது.

ஆனால் உப்பின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உப்பு உற்பத்தியாளர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இதை விட சிறந்த விலை கிடைத்தால் நல்லது என நினைக்கிறோம்.

மேலும், முந்தைய அரசாங்கங்களிடமிருந்து உப்பு உற்பத்திக்கு தேவையான நிலத்தை எங்களால் பெற முடியாமல் போனது. எனவே, புத்தளத்தில் உப்பு உற்பத்தியை மேலும் அதிகரிக்க உதவுமாறு புதிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

இதேவேளை, சமீபத்தில் பெய்த மழையால் எங்களால் உப்பு உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவே, தற்போதைய வறண்ட வானிலை உப்பு உற்பத்திக்கு உகந்ததாக காணப்படுகிறது. இருப்பினும், உப்பின் விலை குறைவடைந்துள்ளதால் நாங்கள் செய்யும் செலவுகளைக் கொண்டு இந்தத் தொழிலை நடத்துவது சற்று கஷ்டமாக உள்ளது. எனவே, இதற்கு அரசாங்கம் சில நிவாரணங்களை வழங்க வேண்டும் என புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உப்பு உற்பத்தியைப் பார்க்கும் ஒருவர் அது அவ்வளவு பெரிய வேலை இல்லை என்று நினைக்கலாம். ஆனால் அது முறையாகச் செய்ய வேண்டிய ஒரு தொழில். எல்லாவற்றிற்கும் மேலாக, தற்போதைய விலையில் தொழிலாளர் செலவுகள் மற்றும் பிற செலவுகள் போக ஒரு சிறிய தொகையை மட்டுமே நாம் பெறுகிறோம். எனவே, இந்தத் தொழிலை நடத்துவதற்கு நமக்குப் பொருத்தமான தொகை கிடைக்க வேண்டும்.

கடந்த காலத்தில், 50 கிலோ ரூ. 12,000 க்கு விற்கப்பட்டது. எங்களுக்கு அவ்வளவு பணம் வேண்டாம். தொழில்துறைக்கு ஏற்ற விலையை நாங்கள் பெற வேண்டும் என்றும் புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.



Post a Comment

Previous Post Next Post