ரஸீன் ரஸ்மின்
புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடத்தை , உள்நாட்டலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான தினேஸ் குணவர்தன மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக இன்று (12) திறந்துவைத்தார்.
புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத் மற்றும் முந்தல் பிரதேச செயலாளர் எம்.எஸ்.பி.டயிள்யூ.ரி.எம்.எஸ்.பி. மல்வில ஆகியோரின் இணைத் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 93 மில்லியன் ரூபா செலவில் முந்தல் பிரதேச செயலகத்திற்கான மூன்று மாடிக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான அசோக பியந்த, அருந்திக்க பெர்னாண்டோ, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகள், வடமேல் மாகாண ஆளுநர் லஷ்மன் யாப்பா அபேவர்தன உட்பட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத் உட்பட பிரதேச செயலாளர்கள், அரச திணைக்கள பிரதானிகள், முப்படையின் பிரதானிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
மேலும், காணி உறுதிப்பத்திரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன், கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் இயந்திரம் உட்பட வாழ்வாதார உதவித் திட்டங்களும் பிரதமரால் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
இதன்போது பிரதமர் தினேஸ் குணவர்தன, வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, இராஜாங்க அமைச்சர் அசோக பியந்த, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக்க அமல் மாயாதுன்ன ஆகியோர் உரையாற்றியதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.