ரஸீன் ரஸ்மின், எம்.ஏ.ஏ.காசிம்
பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்றதும் புத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும் சக்தி பீடங்களில் ஒன்றுமான சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதசுவாமி தேவஸ்தானத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வுகள் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை இடம்பெற்றன.
லிங்கோற்பவருக்கு விஷேட பூசை வழிபாடுகள் இடம்பெற்று விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று சிவராத்திரி பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.
சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதசுவாமி தேவஸ்தானத்தில் ஆலய பிரதான குருவும், தர்மகர்த்தாவுமான பிரம்மஸ்ரீ எஸ்.பத்மநாபக் குருக்கள் தலைமையில் இந்த மஹா சிவராத்திரி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது, நேற்று (8) மாலை 3 மணிக்கு மஹாபிரதோஷ 108 சங்காபிஷேகம் சாயரஷை பூஜையும், இரவு 7 மணிக்கு முதலாம் சாம பூஜையும் தொடர்ந்து இரண்டாம் கால பூஜையும் இடம்பெற்றன.
மேலும், இரவு 10.30 மணிக்கு இரண்டாம் சாம பூஜையும், அதிகாலை நள்ளிரவு மணிக்கு மூன்றாம் சாம பூஜையும், அதிகாலை 3.30 மணிக்கு நான்காம் பூஜையும் தொடர்ந்து மஹா சிவராத்திரி தீர்த்த வாரி நிகழ்வும் இடம்பெற்றன.
ஒவ்வொரு சாம பூஜையிலும் ஆதிலிங்கமாகிய ஸ்ரீ லிங்கோத்பவ பெருமானுக்கு நவகலச ஸ்நபன அபிஷேகமும், ஸ்ரீ வடிவாம்பிகா சமேத முன்னைநாதசுவாமிக்கு சிவாகம விதிப்படி அஷ்டோத்திர சத சங்காபிஷேகமும், விஷேட பூஜையும் இதன்போது இடம்பெற்றன.
இந்த மஹா சிவராத்திரி நிகழ்வுகளிலும், விஷேட பூஜை வழிபாடுகளிலும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.