கற்பிட்டி - நுரைச்சோலை பகுதியில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட சுமார் 2 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
எனினும் இந்த சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் தம்பபண்ணி கடற்படையினரால் நுரைச்சோலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, நுரைச்சோலை , பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றை கடற்படையினர் பரிசோதனை செய்தனர்.
இதன்போது, குறித்த லொறியில் 63 உரமூடைகளில் மிகவும் சூட்சகமான முறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 1955 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட குறித்த பீடி இலைகள் இலங்கையில் பல இடங்களுக்கும் விநியோகிக்கும் நோக்கில் இவ்வாறு லொறியொன்றின் மூலம் கொண்டு செல்வதற்கு சந்தேக நபர்கள் முயற்சித்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட 1955 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் சொகுசு லொறி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலத்திடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த சில மாதங்களில் மாத்திரம் கற்பிட்டி பிரதேசத்தில் இப்பந்தீவு, கீரிமுந்தல், மாம்புரி , நுரைச்சோலை மற்றும் தளுவ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



