சாஹிப்
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சில கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக வடமேற்கு மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்
வடமேல் மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வு குருநாகல் கூட்டுறவு கிராமிய வங்கி சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கால்நடை இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள திஸாநாயக்க உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்தும் பேசிய அவர் மேலும் கூறுகையில்,
தற்போது பாலர் பாடசாலைகளில் கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு சில கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பாக அதற்குப் பொறுப்பான அமைச்சர், அமைச்சரவை பத்திரத்தை தயாரித்து வருகின்றார்.
எதிர்காலத்தில் இந்நாட்டின் முன்பள்ளி துறைக்கு இது நல்லதொரு விடயமாக அமையும்.
குழந்தைகளை சரியான பாதைக்கு கொண்டு செல்வதில் பாலர் பாடசாலை முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டுக்கு நல்ல எதிர்கால குடிமகனை உருவாக்க குழந்தைகளின் மனம் நன்றாக இருக்க வேண்டும்.
ஒருசில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டில் மிகவும் கொடூரமாக நடத்துகின்றனர். இதனால் குழந்தைகளின் இயல்பு நிலை கொடூர மனோநிலை மாற்றத்துக்கு உள்ளாகிறது.
இந்த மனநிலையுடன் வீட்டில் இருந்து வரும் குழந்தையை ஆசிரியர்கள் நல்ல முறையில் எப்படி தயார்படுத்துவது. காரணம், பாலர் பாடசாலைக்கு வரும் குழந்தைகள் மிகக் குறுகிய நேரமே ஆசிரியருடன் இருக்கின்றனர்.
எனவே, நல்ல குழந்தையை உருவாக்குவதில் பெற்றோருக்கும் பெரும் பங்கு உள்ளது என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும் என்றார்.





