ரஸீன் ரஸ்மின்
புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியின் ஆசிரியரும், புத்தளத்தின் மூத்த ஊடகவியலாளருமான மர்ஹூம் ஜே.இஸட்.அப்துல் நமாஸ் அவர்களின் திடீர் மறைவானது அவரது குடும்பத்தினருக்கு மாத்திரமன்றி, அவரது ஆசிரிய, ஊடக நண்பர்கள் மற்றும் அவரிடம் கவ்வி கற்ற மாணவர்கள் என்று தராதரம் பார்க்காமல் அனைவருக்கும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறிது காலம் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டார். அன்னாரது ஜனாஸா அன்றைய தினமே இரவு 9 மணியளவில் புத்தளம் மஸ்ஜிதுல் பாக முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரது ஜனாஸா நல்லடக்கத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள்,உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.
மூன்று ஆண் சகோதரர்களுடன் பிறந்த இவர் குடும்பத்தில் மூத்த பிள்ளையாகும். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் மரணிக்கும் போது இவருக்கு 57 வயதாகும்.
மர்ஹூம் ஜே.இஸட். அப்துல் நமாஸ், சமூக சேவைகளில் எப்படி முக்கியத்துவம் வழங்கினாரோ அதுபோல தனது குடும்ப விடயங்களிலும் கணவனாக, தகப்பனாக இருந்து பல கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு தனது நான்கு பிள்ளைகளையும் வளர்த்துள்ளார்.
எம்.ஜே.எப்.நைலூபா, மர்ஹூம் ஜே.இஸட். அப்துல் நமாஸ் அவர்களின் மனைவியாகும். புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
மாத்திரமின்றி, அவரது மூத்த புதல்வி நமாஸ் பாத்திமா நஹ்ஷத் புத்தளம் கணமூலை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றுகின்றார். இரண்டாவது புதல்வி நமாஸ் பாத்திமா நஷாஹத் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்விமானி பட்டப் படிப்பை மேற்கொள்கிறார். அவரது மூன்றாவது பிள்ளையான நமாஸ் நாதில் அஹ்மட் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் உயர்தரம் கற்கின்ற அதேவேளை, அவரது இளைய மகனான நமாஸ் முஹம்மட் நஹ்தான் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் சாதாரண தரத்திலும் கற்கின்றார்.
புத்தளம் - சென் அன்ரூஸ் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்ற மரஹூம் ஜே.இஸட்.ஏ.நமாஸ், க.பொ.த சாதாரண தரப்பரீட்டையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியில் வர்த்தகத்துறையில் கற்றார்.
பின்னர், யாழ். பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய இவர், 1996 ஆம் ஆண்டு வர்த்தகத்துறையில் சிறப்புப் பட்டதாரியாக பட்டம் பெற்றார். மேலும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்விக்கான முதுகலை டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார்.
பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகம் என்பனவற்றில் கல்வி கற்கும் காலங்களில் சிரேஷ்ட மாணவத் தலைவராகவும், மாணவ மன்றங்களின் தலைவராகவும், விளையாட்டுக்குழுக்களுக்கு பொறுப்பாளராகவும் இருந்து தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தில் இணைந்துகொண்டு காசாளராக கடமையாற்றினார்.
அத்துடன், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் புத்தளம், ஆனமடுவ, திருகோணமலை ஆகிய அலுவலகங்களில் 2004 ஆம் ஆண்டு வரையும் காசாளாராக கடமையாற்றியுள்ளார்.
பின்னர் 2004.11.15 ம் திகதி இலங்கை ஆசிரியர் சேவைக்குள் நுழைந்த இவர், கடையாமோட்டை மு.ம.வித்தியாலத்தில் வணிக ஆசிரியராக நியமனம் பெற்றார்.
அதனையடுத்து, புத்தளம் வெட்டாளை அசன் குத்தூஸ் முஸ்லிம் மஹா வித்தியாலயம், புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளிலும் கற்பித்த இவர், இறுதியாக ஓய்வுபெறும் வரை புத்தளம் சாஹிரா தேசியப் பாடசாலையில் வணிகம் மற்றும் கணக்கியல் பாட ஆசிரியராக கடமையாற்றினார்.
ஆசிரியராக நியமனம் பெற்றது முதல் தான் கற்பித்த பாடசாலைகளில் கல்வி அபிவிருத்திக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மர்ஹூம் ஜே.இஸட்.அப்துல் நமாஸ்,
குறிப்பாக வரிய மாணவர்களின் கல்விக்கு அதிகம், அதிகமாக உதவுபவராக காணப்பாட்டார்.
1990 ஆம் ஆண்டு புத்தளம் முஸ்லிம் நலன்புரி சங்கம் ஒன்றை ஆரம்பித்து, அதன் தலைவராகவும் செயற்பட்டார். இதன் மூலம் பொருளாதாரத்தில் நலிவடைந்து காணப்படும் மாணவர்களுக்கு இலவச கல்வி கருந்தரங்குகளை வழங்கி வந்ததுள்ளார்.
1994 ஆம் ஆண்டு ஒருசிலரின் உதவியில் காலப்பகுதியில் Spill kings எனும் அமைப்பை உருவாக்கி ஐந்தாம் தர மாணவர்கள், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்காக விஷேடமாக தயாரிக்கப்பட்ட "அறிவுச்சுடர்" எனும் பரீட்சை வழிகாட்டி , சிறுகதைகள், கட்டுரைகள் என்பனவற்றை உள்ளடக்கிய சஞ்சிகை ஒன்றையும் வெளியிட்டார்.
கணினி இல்லாத அந்தக் காலத்தில் தட்டச்சு இயந்திரத்தில் தட்டச்சு செய்யப்பட்டு, அது புத்தக வடிவில் சஞ்சிகையாக தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார்.
மாத்திரமன்றி, Spill Kings மூலம் "பெட்மின்டன்" கழகம் ஒன்றையும் புத்தளத்தில் உருவாக்கினார். இதன் மூலம் பயிற்றப்பட்ட நடுவர்கள் உருவாக்கி புத்தளத்திற்கும், அகில இலங்கை ரீதியாகவும் பெருமை சேர்த்தது.
மேலும், வசதி குறைந்தவர்களுக்கு ஏற்படும் பாரிய நோய்களுக்கு புத்தளம் தனவந்தர்களின் நிதி பங்களிப்பில் உதவும் நோக்கில் புத்தளம் பெரிய பள்ளிவாசலை தலைமையகமாக கொண்டு 1998 இல் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை இயங்கி வரும், வைத்திய சகாய நிதியத்தை உருவாக்கிய ஸ்தாபகர்களுள் ஒருவராக காணப்படும் இவர், இந்த நிதியத்தை முன்னேற்ற பல வழிகளில் அர்ப்பணிப்புக்களுடன் செயற்பட்டுள்ளமை ஏனைய ஸ்தாபக உறுப்பினர்கள் மூலமாக தெரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.
அத்துடன், 1990 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் புத்தளம் பெரிய பள்ளிவாசலின் கீழ் "நல்லிணக்க குழு" ஒன்றை உருவாக்குவதற்கு மர்ஹூம் ஜே.இஸட்.அப்துல் நமாஸ், முன்னின்று செயற்பட்டுள்ளார். அதுவே நாளடைவில் விருத்தி அடைந்து தற்பொழுது "மஜ்லிஸ் சூறா" வாக இயங்கி வருகிறது.
அத்தோடு, 1959 ஆம் ஆண்டு புத்தளத்தில் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய முன்னணி இயக்கம் எனும் அமைப்பின் ஊடாக நடத்தப்பட்ட அஹதிய்யா வகுப்புக்களில் 1987 மற்றும் 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இரண்டு வருடங்கள் தொண்டர் ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார்.
புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி வந்த காலப்பகுதியில், "ஸெபக்தக்ரோ" எனும் போட்டியை மர்ஹூம் ஜே.இஸட்.அப்துல் நமாஸ் ஆசிரியரே பாடசாலையில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தின் முஸ்லிம் லீக் வாலிப முண்ணனிகளின் சம்மேளனத்தின் முன்னாள் பணிப்பாளராக செயற்பட்ட மர்ஹூம் ஜே.இஸட்.அப்துல் நமாஸ், வாலிப முண்ணனிகள் ஊடாக புத்தளம் மாவட்டத்துக்கு பல சேவைகளை முன்னெடுத்துள்ளார்.
மூத்த ஊடகவியலாளர் எம்.என்.அமீன் முஸ்லிம் லீக் வாலிப முண்ணனிகளின் தலைவராக இருந்த போது, அப்போதைய புத்தளம் மாவட்ட பணிப்பாளராக இருந்த மர்ஹூம் ஜே.இஸட்.அப்துல் நமாஸ் அவர்களின் வேண்டுகோள் பேரில் பாகிஸ்தான் தூதுவராலயத்தின் மூலமாக கணினி பயிற்சி நிலையம் மற்றும் தையல் பயிற்சி நிலையம் என்பவற்றை புத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டன.
ஊடகத்துறையில் டிப்ளோமா பட்டத்தையும் நிறைவு செய்த மர்ஹூம் ஜே.இஸட்.அப்துல் நமாஸ், நவமணி ஊடாக ஊடகத்துறைக்குள் பிரவேசித்ததுடன், இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம், தினகரன், டெய்லி நியுஸ், விடிவெள்ளி மற்றும் தமிழ் மிரர் ஆகியவற்றின் புத்தளம் நிருபராக பணியாற்றினார்.
தேசிய அரசியல், சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் அதிக ஈடுபாடு காட்டி பல கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.
புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியாளர் சங்கத்தை ஆரம்பித்து அதன் செயலாளராக இருந்து பின் தலைவராக பணியாற்றினார். புத்தளத்தில் பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற நோக்கில் 2007 ஆம் ஆண்டு ''புத்தெழில்" எனும் பத்திரிகை ஒன்றையும் சொந்த முயற்சியில் வெளியிட்டார்.
2007 ஆம் ஆண்டில் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகராக பதவி வகித்த டபிள்யூ. ஜே.எம்.லொக்குபண்டார அவர்களை நேரில் சந்தித்து புத்தளத்தின் முதல் பத்திரிகை பிரதியையும் வழங்கி பெருமை சேர்த்துள்ளார்.
இந்த பத்திரிகை வாரத்திற்கு இருமுறை வெளியிடப்பட்டது. இந்த பத்திரிகை வெளியிடுவதற்கு முன்னர் இளைஞர், யுவதிகளுக்கு இலவச ஊடக பயிற்சிகளை வழங்கினார். இவரிடம் ஊடகப் பயிற்சிகளைப் பெற்ற ஒரு சிலர் அவரோடு இணைந்து தொண்டர் அடிப்படையில் புத்தெழில் பத்திரிகையிலும் பணிபுரிந்தனர்.
மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நீண்ட காலமாக புத்தளம் மாவட்ட இணைப்பாளராகவும் செயற்பட்டு வந்த மர்ஹூம் ஜே.இஸட்.அப்துல் நமாஸ், பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஊடக கழகங்களை உருவாக்குவதில் அதிக ஆர்வத்தைக் காட்டினார். புத்தளத்தில் தமிழ் - சிங்கள ஊடகவியலாளர்கள் மத்தியில் இன நல்லுறவை ஏற்படுத்துவதில் அதிக ஆர்வத்தையும் காட்டினார்.
விருது பெறுவதற்கும், பெயர் போடுவதற்கும் , பட்டங்களை பெருவதற்கும் கொஞ்சம் கூட விருப்பமில்லாத மர்ஹூம் ஜே.இஸட்.அப்துல் நமாஸ், அமைதியாக இருந்து பல்வேறு பணிகளை குறிப்பாக அவரது கப்றுக்குள் நிலையான நன்மைகளை கொண்டு சேர்க்க கூடிய பணிகளை செய்துகொண்டிருந்த நிலையில் இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
மர்ஹூம் ஜே.இஸட்.அப்துல் நமாஸ் ஆசிரியர் மறைந்தாலும் அவர் இவ்வுலகில் விட்டுச் சென்றவை ஒருபோதும், மறைந்து போகாது. அன்னாருடைய இருவுலக வாழ்க்கையையும் இறைவன் பொருந்திக் கொள்ள வேண்டும். அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்தரமான சுவனத்தை இறைவன் வழங்க வேண்டும். அன்னாரை இழந்து தவிக்கும் அன்புத் தாய் , சகோதரர்கள் மற்றும் மனைவி, பிள்ளைகள், உறவினர்களுக்கும் இறைவன் ஆறுதலையும், பொறுமையையும் கொடுக்க வேண்டும்.
- நன்றி விடிவெள்ளி 2023.10.19
