ரஸீன் ரஸ்மின்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், அமைப்பாளரும், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான என்.டி.எம்.தாஹிர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் நேற்று சனிக்கிழமை (02) உத்தியோகபூர்மாக இணைந்துகொண்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் முன்னிலையில் என்.டி.எம்.தாஹிர் தனது ஆதரவாளர்கள் சகிதம் இணைந்துகொண்டார்.
புத்தளம் தில்லையடியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான அமீர் அலி, பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம்.நவவி உட்பட உலமாக்கள், மக்கள் காங்கிரசின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தலைமைதாங்கி வழிநடத்திய காலத்தில் தன்னை அக்கட்சியினயில் இணைத்துக் கொண்டு அரசியல் பயணத்தை ஆரம்பித்த என்.டி.எம்.தாஹிர், 1991 ஆம் ஆண்டு கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினராக முதல் தடவையாக தெரிவு செய்யப்பட்டார்.
பின்னர், 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கற்பிட்டி பிரதேச சபை தலைவராகவும், 2002 ஆம் ஆண்டு எதிர்க் கட்சித் தலைவராகவும், 2004, 2009 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற வடமேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு மூன்று தடவைகள் உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
கற்பிட்டி பிரதேச சபை தலைவராகவும், மாகாண சபை உறுப்பினராகவும் இருந்து கடந்த 30 வருடங்களுக்கு மேல் அரசியலில் பயணித்த என்.டி.எம்.தாஹிர், கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றுசேர்ந்து களமிறங்கிய தராசு கூட்டணியில் இணைந்து பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டதுடன், பட்டியலில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.
புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் நிலையில், அதற்கான வியூகங்களை அமைத்து புத்தளத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும், புத்தளம் நகர சபை, கற்பிட்டி மற்றும் வன்னாத்தவில்லு பிரதேச சபைகளின் அதிகாரங்களை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றி மக்களுக்கு நிறைவான சேவைகளை வழங்கவோம் என என்.டி.எம்.தாஹிர் கூறினார்.
மேலும், மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருந்து, கட்சியை வளர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, புத்தளத்தில் வாழும் மூவின மக்களுக்கும் பணியாற்றுவதே எனது இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மக்கள் காங்கிரஸ் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும், பிரதேச அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் ஆலோசனைகளையும் பெற்று கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வழிகாட்டலில் செயற்படவும் தீர்மானித்துள்ளேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்துகொண்ட என்.டி.எம்.தாஹிர், மக்கள் காங்கிரசின் புத்தளம் அமைப்பாளராகவும், பாராளுமன்ற வேட்பாளராகவும் நியமிக்கப்படுவார் எனவும் மக்கள் காங்கிரசின் உறுப்பினர் ஒருவர் எமது இணையத்திற்கு தெரிவித்தார்.