ரிஸ்வி ஹூஸைன்
இலங்கையில் சுகாதார சேவைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பத்து இலட்சம் கையெழுத்து திரட்டும் ஆவணத்தில் கையொப்பமிடும் நிகழ்வு இன்று புத்தளம் - கற்பிட்டி நகரில் இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கற்பிட்டி அமைப்பாளர் எம்.எப்.எம். ரில்மியாஸின் ஏற்பாட்டிலும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளருமான ஹெக்டர் அப்புஹாமியின் தலைமையிலும் நடைபெற்றது.
இதன்போது, ஐ.ம.சக்தியின் கற்பிட்டி பிரதேச சபை வேட்பாளர்களான ஏ.ஆர்.எம். முஸம்மில், எம்.ரிஸ்வி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மகத்துன் ரொட்ரிகோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, கற்பிட்டி நகரில் வாழும் மூவின மக்கள் பெரும் எண்ணிக்கையிலயலானோர் சுகாதார அமைச்சருக்கு எதிராக கையெழுத்து திரட்டும் ஆவணத்தில் கையொப்பமிட்டனர்.
இதேவேளை, சுகாதார அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 06ஆம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.