புத்தளம் தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் இஷாம் மரிக்கார், கடுமையான முறையில் தாக்கப்பட்டமையை கண்டித்து, புத்தளத்தில் ஜூம்ஆ தொழுகையின் பின்னர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது தாக்குதலுக்கு உள்ளான இஷாம் மரைக்காருக்கு நீதியை பெற்றுக் கொடுக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், இதற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
அரசியல் அதிகாரங்களை சுமந்தவர்கள் தொடர்ந்தும் அதிகார துஷ்பிரயோகத்தை மேற்கொண்டுவருவதை வன்மையாக கண்டித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கைகயில் ஈடுபட்டனர்.
இதன்போது புத்தளம் தலைமையக பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.
கடந்த 28 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் புத்தளம் தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் இஷாம் மரிக்கார் தனது வீட்டுக்கு முன், இரண்டு நபர்களால் கடுமையான முறையில் தாக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-சாஹிப்-