கற்பிட்டி வீதி விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

கற்பிட்டி, பள்ளிவாசல்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கற்பிட்டி திகழி, ஏத்தாளையைச் சேர்ந்த சஹாப்தீன் சல்மான் (வயது 25) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளும், சிறிய ரக லொறியொன்றும் கற்பிட்டி பள்ளிவாசல்துறை கண்டல்குடா பாலத்திற்கு அருகே மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அங்கிருந்தவர்கள்  குறித்த இளைஞனை சிகிச்சைக்காக கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அங்கிருந்து புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும், புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்த குறித்த இளைஞன், கற்பிட்டி, குறிஞ்சிப்பிட்டியில் நேற்று (07) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் ரேஸ் போட்டியை பார்வையிட்ட பின் தனது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார் என சொல்லப்படுகிறது.

உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Sahib Ahmed -

Post a Comment

Previous Post Next Post