புத்தளம் - றிஷாட் பதியுதீன் மஹா வித்தியாலயாலயத்தின் 15 வருட பூர்த்தியை முன்னிட்டு, பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கலை, கலாசார மற்றும் பரிசளிப்பு விழா கடந்த முதலாம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் ஏ.ஏ.பௌசின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, புத்தளம் வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.அஸ்கா, புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரிபாஸ் நஸீர், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், மேல் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு உறுப்பினர் முஹம்மது லியாவுதீன், பொறியியலாளர் முஹம்மது யாசின் உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், அல்காசிமி சிட்டி, முல்லைஸ் ஸ்கீம், 100 வீட்டுத் திட்டம், ஹிஜ்ரத்புரம் மஸ்ஜித் நிர்வாகிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, பாடசாலையின் ஆரம்பம் முதல் இன்று வரை அதன் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றியவர்கள் பற்றியும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரம் என்பனவற்றில் மாணவர்கள் பெற்றுக் கொண்ட பெறுபேறுகள் பற்றியும் நினைவுகூறப்பட்டன.
மேலும், இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.எம்.நஜ்மி , பாடசாலையில் கல்வி கற்பித்து இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்கள், ஓய்வபெற்ற ஆசிரியர்கள், தற்போது கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் மற்றும் பாடசாலையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் பிரதம அதிதி உட்பட ஏனைய அதிதிகளால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினர், தாராபுரம் மினா 90 உறுப்பினர்கள் உட்பட பெற்றோர்கள் சார்பாகவும் பிரதம அதிதி உட்பட அதிதிகளும், பாடசாலையின் முன்னாள் அதிபர் மற்றும் தற்போதைய அதிபர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, அல்காசிமி சிட்டி ஜூம்ஆ மஸ்ஜிதில் கடந்த பத்து வருடங்களுக்கு மேல் முஅத்தினாக கடமையாற்றி வரும் முஹம்மது சஹாப்தீனும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
அத்தோடு, பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றதுடன், மூத்த எழுத்தாளர் கவிக்குரல் மன்சூரினால் ஓரங்க நாடகமும் அரங்கேற்றப்பட்டன.
- ரஸீன் ரஸ்மின் -
படங்கள்: Risad Bathiudeen MV PPA