சாஹிப்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் வடக்கு தமிழ் - முஸ்லிம் மக்களிடையில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கின்றார் என பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அமைப்பின் செயலாளர் முஹம்மது நைசர் குற்றம்சாட்டினார்.
கிளிநொச்சி முஸ்லிம் குடும்பங்களுக்கு 400 வீடுகளை வழங்க ஜனாதிபதி எடுத்துவரும் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் கருத்தை கண்டிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தால் இரண்டு மணித்தியாலங்கள் காலக்கெடுவில் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம் மக்கள் அன்று வெளியேறும் போது ஒரு இலட்சமாக இருந்தவர்கள் இன்று, 32 வருடங்களின் பின் இரண்டு, மூன்று மடங்குகளாக அதிகரித்துள்ளனர்.
எனவே, இவர்களுக்கு உதவி செய்வது இந்த அரசாங்கத்தின் கடமையாக இருக்கிறது. எனவேதான் இந்த நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கிளிநொச்சியில் வாழும் 400 முஸ்லிம் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பது தொடர்பாக ஆலோசனை செய்து வருவதாக அண்மையில் கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நாட்டில் ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றி காத்திரமான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை.
எனினும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதுபற்றி ஒருவார்த்தை பேசியிருக்கிறார். அதனை சகித்துக்கொள்ள முடியாமல் ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தனது இனவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கம் முஸ்லிம் மக்களுக்கு மாத்திரம் வீடுகளை வழங்கி கிளிநொச்சி மாவட்டத்தில் ஒற்றுமையாக வாழும் தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒற்றுமையை சீர்குலைக்க முயல்கிறார்கள் என்ற கருத்தில் ஆலோசனை சொல்வதாக முஸ்லிம்களுக்கு காணி, வீடு வழங்க கூடாது என்று கருத்துப்பட தனது வக்கிரம இனவாத கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.
எதற்கும் முன்னுதாரணமாக பேசக் கூடிய நீங்களே இவ்வாறு பேசுவது உங்கள் மீது நாங்கள் வைத்துள்ள நன்மதிப்பை, மரியதையை இழக்கச் செய்யும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் மக்கள் தமது உரிமைகளை கோரி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், தமிழர்களின் போராட்டங்களை நாங்கள் ஒருபோதும் கொச்சப்படுத்தியது கிடையாது.
அது அவர்களின் உரிமை சார்ந்த விடயமாக நாம் பார்க்கிறோம். இரண்டு வருடங்கள் முகாம்களில் வாழ்ந்த மக்களுக்கு துரித கதியில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் அவர்களுக்கு தேவையான அத்தனை அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால், 32 வருடங்கள் தமது சொந்த மண்ணில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்கள் விடயத்தில் யாரும் அக்கறை செலுத்தவில்லை. அவர்களின் மீள்குடியேற்ற விடயத்தில் எந்த அரசாங்கமும் கவனம் செலுத்தவில்லை. தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும் என்று சொல்வார்கள்.
நீங்கள் வடபுல முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், அவர்களின் மனங்கள் புண்படும் வகையில் பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
நாங்கள் உங்களிடம் சொத்துக்களை கேட்கவில்லை. வாழ்வதற்குரிய உரிமையை கேட்கிறோம். எங்களுடைய உரிமைகள் விடயத்தில் கைவைக்க வேண்டுடாம் என்று கேட்கிறோம்.
நீங்கள் அரசியல் செய்யுங்கள். அரசியல் செய்வதற்காக பேசுங்கள். ஆனால், எமது முஸ்லிம் மக்களின் உள்ளங்களை நோகடிக்கும் விதத்தில் பேசாதீர்கள் என்று மிகவும் அன்பாக கேட்கிறோம்.
வடக்கில் நாங்கள் பயிரைப் போல இருந்தோம். நீங்கள் வேலியைப் போல இருந்தீர்கள். எமது வெளியேற்றம் வேலியே பயிரை மேய்ந்த கதயாக இருந்தது.
விடுதலைப்புலிகள் இரண்டு மணி நேர காலக்கெடுவில் எங்களை துரத்தியதை 'தும்பியல்' என்று நீங்கள் ஒரு சிம்பலாக சொல்கிறீர்கள்.
எதற்காகவும் எமது முஸ்லிம் சமூகம் தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்டது கிடையாது. தமிழ் மக்களுக்கு கிடைக்க கூடிய உரிமைகளை நாங்கள் தட்டிப் பறிக்கவும் முயலவில்லை.
வடக்கில் தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என ஆசைப்படுகிறோம். நாங்கள் நீண்ட காலம் வாழ வந்தவர்கள் அல்ல. கொஞ்ச காலம் வாழவந்தவர்கள். ஆனால், நீங்கள் நெடுங்காலமாக வாழ வந்தவர்கள் போல செயற்படுகிறீர்கள். தொடர்ச்சியாக முஸ்லிம் மக்களின் உள்ளங்களை நேகடித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
மேலும், வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை அவர்களது சொந்த மண்ணில் கௌரவமாக மீள்குடியேற்றம் செய்ய தற்போதைய ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசாங்கம் நிச்சயமாக நடவடிக்கைகள் எடுக்கும் என நம்புகிறோம்.
நாம் இந்த அரசாங்கத்திடம் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறோம். வடபுல முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை ஆராய உடனடியாக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும். ஜெனிவா உட்பட சர்வதேச நாடுகளில் 'அகதிகள், பாதிக்கப்பட்டவர்கள்' எனும் பெயர் வருகின்ற போது அதில் வடபுல முஸ்லிம்களும் உள்வாங்கப்பட வேண்டும். எங்களுடைய மக்களுக்கு மீள்குடியேற்றம் முழுமைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அமைப்பின் ஊடக செயலாளர் முஜாஹித் நிஸாரின் கருத்து...
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனின் அரசியல் செயற்பாடுகளை நாங்கள் அவதானித்துக் கொண்டிருக்கிறோம்.
சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய ஒருவர் தனது அரசியல் சுய இலாபங்களுக்காக இனவாத பேச்சுக்களை பேசி தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வெறுப்புக்களை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.
வடக்கு மாகாணத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக ஜனாதிபதி கொண்டுவரும் வீட்டுத் திட்டத்தை அந்த மாகாணத்தில் உள்ள தமிழ் சகோதரர், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எதிர்ப்பது, தனது வன்மத்தை தெரிவிப்பது எங்களுக்கு வேதனையைத் தருகிறது.
பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அமைப்பு என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
மாத்திரமன்றி, 13 வது திருத்தச் சட்டம், சமஷ்டி, வடகிழக்கு இணைப்பு என்றெல்லாம் தமிழ் கட்சிகளும், வெளிநாட்டு அமைப்புக்களும் பேசிக்கொண்டு இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஆயுத முனையில் முஸ்லிம் மக்கள் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டது ஒரு செய்தியாகும் என்று தெரிவிக்கப்பட்டதையும் நாம் கண்டிக்கிறோம்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பச்சிலைப்பள்ளி மற்றும் நாச்சிக்குடா, பள்ளிக்குடா ஆகிய கிராமங்கள் முஸ்லிம் மக்களின் பூர்வீக குடியேற்றங்களாகும்.
அந்த பிரதேசங்களில் முஸ்லிம்களின் பூர்வீகம் என்பதற்கான அத்தனை வரலாறுகளும் எங்களிடம் இருக்கிறது.
தமது சொந்த மண்ணிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு தமது சொந்த மண்ணில் ஒரு அங்குல காணியாவது வழங்கப்படவில்லை.
ஒரு இலட்சம் முஸ்லிம் மக்கள் சுயவிருப்பத்தில் தமது சொந்த மண்ணை விட்டு வெளியேறிச் செல்லவில்லை. பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஐயாவும் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.
அத்துடன், அதே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்கின்ற ஸ்ரீதரன் எம்.பி, இந்த வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒரு செய்தி என்று கூறுகிறார்.
மட்டுமன்றி, தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ள தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தொடர்ச்சியாக தெரிவிக்கும் ஸ்ரீதரன் எம்.பி தொடர்பில் அவரது கட்சியிடம் விளக்கம் கேட்க இருக்கிறோம்.
அன்று ஆயுத முனையில் எமது சமூகத்தை நசுக்கிய நீங்கள் இன்று பேனாவினால் நசுக்க பார்க்கிறீர்கள். இதுபோன்ற இனவாத நச்சுக்களை வெளியிட்டவர்களின் அரசியல் வரலாறுகளை கொஞ்சம் புரட்டிப்பாருங்கள். அவர்களின் நிலை என்ன என்பதை புரிந்துகொள்வீர்கள் என்றார்.

