ரஸீன் ரஸ்மின்
மன்னார் - தாராபுரத்தைச் சேர்ந்தவரும், புத்தளம் அல்காசிமி சிட்டியில் வசித்து வந்தவருமான ஓய்வுபெற்ற அதிபர், நாடறிந்த கவிஞர் , எழுத்தாளர் ஹாஜா அலாவுதீன் இன்றிரவு காலமானார்.
ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணிக்கும் போது இவருக்கு வயது 61 ஆகும். ஆசிரியராக இருந்து அதிபர் தரத்திற்கு தரமுயர்ந்த இவர், புத்தளம் தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் அதிபராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஒரு ஆசிரியராக , அதிபராக , சமூக சேவையாளராக பணியாற்றி வந்த மர்ஹூம் ஹாஜா அலாவுதீன், நாடறிந்த கவிஞராகவும், நாடக கலைஞராகவும் திகழ்ந்தார்.
பல நூல்களை எழுதிய இவர், புனித நோன்பு மற்றும் ஹஜ்ஜூப் பெருநாளில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நேத்ரா தொலைக்காட்சி என்பனவற்றில் இடம்பெறும் பல கவியரங்குகளில் பங்கேற்றுள்ளார்.
மேலும், இவர் எழுதிய பல குறுநாடகங்கள் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளி, ஒலி பரப்பாகியுள்ளமை சிறப்பம்சமாகும்.
இவருடைய ஆசிரியர் சேவையை விட கலைத்துறை சேவைக்கு பல விருதுகள் கிடைத்தன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அமைச்சர்கள், தூதுவர்கள் பலர் இவரின் கலைத்துறையை பாராட்டி பல விருதுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்துள்ளனர்.
எண்ணங்கள், உணர்வுகள், நெருக்கமான உறவுகள், பிற சமூகத் தொடர்பாடல்கள் என பன்முக ஆற்றல், ஆளுமை கொண்ட ஒருவராக மர்ஹூம் ஹாஜா அலாவுதீன் காணப்பட்டார்.
அன்னாரின் திடீர் மறைவு மன்னார் தாராபுரம் மக்களுக்கு மாத்திரமின்றி, முழு கலையுலகத்திற்கும் பேரிழப்பாகும்.
அன்னாரின் பிரிவால் துயரம் குடும்பத்தினர், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்னார் இவ்வுலகில் ஆற்றிய அத்தனை அமல்களைகளையும், பணிகளையும் இறைவன் பொருந்திக் கொள்ள வேண்டும். அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்தரமான சுவனத்தை வழங்க வேண்டும்.
படங்கள் : கவிஞர் மர்ஹூம் ஹாஜா அலாவுதீனுடைய முகநூலில் இருந்து...






