உள்ளுராட்சி மன்றத் தேர்தல்: புதிய முகங்களும், கட்சி மாறிய உறுப்பினர்களும்


புத்தளம் 22

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாநகர சபைக்கு போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களான எம்.எச்.எம்.ரஸ்மி மற்றும் முஹம்மது அஸ்கீன் ஆகிய இருவரும் இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.



இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு உறுப்பினராகி, முன்னாள் புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸின் மறைவையடுத்து, அந்த வெற்றிடத்திற்கு புதிதாக நகர பிதாவாக தெரிவான எம்.எஸ்.எம்.ரபீக், இந்த தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து போட்டியிடுகின்றார்.



மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக செயற்பட்ட புத்தளம் நகர சபையின் முன்னாள் பிரதி தலைவரான ஏ.ஓ.அலிகான் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினரான முஹம்மது நுஸ்கி ஆகிய இருவரும் இந்த தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான தராசு கூட்டணி பாராளுமன்ற வேட்பாளர் முஹம்மது முஸம்மில் இந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

மேலும், ஐக்கிய காங்கிரஸ் கட்சி இம்முறை முதற் தடவையாக புத்தளம், கற்பிட்டி ஆகிய பிரதேச சபைகளுக்கும், புத்தளம் மாநகர சபைக்கும் போட்டியிடுகின்றது.

அத்தோடு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக்  கட்சியின் முயல் சின்னத்திலும், எமது வேட்பாளர்கள்  இம்முறை புத்தளத்தில்  களமிறங்கியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ,  தேசிய மக்கள் சக்தி சார்பிலும் சிலர் போட்டியிடுகின்னர்.

மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் மாநகர சபை, புத்தளம் பிரதேச சபை, வன்னாத்தவில்லு பிரதேச சபை, கற்பிட் பிரதேச சபை, ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபை மற்றும் சிலாபம் பிரதேச சபை என்பனவற்றுக்கு இம்முறை பல புதிய முகங்கள் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

மேலும், கற்பிட்டி பிரதேச சபைக்காக 7 சுயேட்சைக் குழுக்களும், புத்தளம் பிரதேச சபைக்காக 2 சுயேட்சைக் குழுக்களும், புத்தளம் மாநகர சபைக்காக 4 சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன.

சிறுபான்மை மக்கள் அதிகமாக வாழும் மேற்படி நானக்கு சபைகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மேலதிகமாக 13 சுயேட்சைக் குழுக்கள் களமிறங்கியுள்ளன.

எனினும், சிலாபம் பிரதேச சபை, ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபை மற்றும் சிலாபம் நகர சபைகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மாத்திரமே இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இதேவேளை, கடந்த பொதுத் தேர்தலில் சிறுபான்மை கட்சிகள், உறுப்பினர்கள் அனைவரும் புத்தளம் மாவட்டத்தில் ஒன்றினைந்து ஒரே கூட்டணியில் களமிறங்கியது போல இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் மக்கள் காங்கிரஸ் , முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அலிசப்ரி ரஹீம் எம்.பி, புத்தளம் நகர பிதா ரபீக், கற்பிட்டி பிரதேச சபை தலைவர் இன்பாஸ் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளை மீண்டும் ஒன்றினைத்து கூட்டணி அமைக்கும் பல பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் கடைசியில் அது கைகூடவில்லை என சொல்லப்படுகிறது. 

சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டணி அமைப்பதற்கு தங்களது விருப்பத்தை தெரிவித்தாலும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை என்பதால் தாங்களும் கூட்டணி அமைக்கும் முடிவை மாற்றியுற்றனர் எனவு கூறப்படுகிறது.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தமது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று இரவு அறிவித்திருந்தது.

-அல்முஷ்ரிப்-


Post a Comment

Previous Post Next Post