புத்தளம் பொலிஸ் பிரிவில் தங்க நகைகள், பணம், தண்ணீர் மோட்டர் , சமையல் எரிவாயு, துவிச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பல திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முடிக்கிவிட்டுள்ளதாக தெரிவித்த புத்தளம் பொலிஸார், சந்தேகத்தின் பெயரில் ஓரிருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
கடந்த வாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான மர்ஹூம் நூர்தீன் மசூரின் புத்தளம் நாகவில்லு பகுதியில் உள்ள வீட்டை உடைத்து 160 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்கம், பணம் மற்றும் பொருட்கள் என்பன திருடப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வன்னி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரபல வர்த்தகருமான மர்ஹூம் நூர்தீன் மசூர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
முன்னாள் பிரதி அமைச்சரான மர்ஹூம் நூர்தீன் மசூர், பிரபல வர்த்தகர் எனவும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் அமைச்சரின் மரணத்திற்குப் பின்னர் அவரது மனைவி புத்தளம் நாகவில்லு வீட்டில் வசித்தி வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், முன்னாள் அமைச்சரின் மனைவி சில நாட்களாக வீட்டில் இல்லாத போது, வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் தங்கம், பணம் மற்றும் பொருட்கள் என்பனவற்னை திருடிச் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளரான முன்னாள் அமைச்சரின் மனைவி செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், கிடைத்த தகவலின் அடிப்படையில், திருடப்பட்ட ஒருசில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேற்படி திருட்டுச் சம்பவத்தில் 10 இளைஞர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
இதேவேளை, புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரத்மல்யாய , முல்லை ஸ்கீம் கிராமத்தில் இரண்டு வீடுகள் உடைக்கப்பட்டு, தங்க நகைகள், பணம் உட்பட இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் முல்லை ஸ்கீம் கிராமத்தில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த திருடன் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, ரயிஸ் குக்கர், தங்க நகைகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றையும் திருடிச் சென்றுள்ளதாக குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன், அதே கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (09) மற்றுமொரு வீடொன்றிலும் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறித்த வீட்டின் சமயலறை ஜன்னல் ஊடாக வீட்டுக்குள் சென்ற திருடன் வீட்டின் அறையில் உள்ள அலுமாரியில் வைக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகை மற்றும் ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளதாக அந்த வீட்டின் உரிமையாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
மேற்படி இரண்டு வீடுகளிலும் பகல் வேளைகளில் இவ்வாறு தங்க நகைகள், பணம் உட்பட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்துடன், முதலாவது வீட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் அவர் தற்போது தலைமறைவாகி இருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதுபோன்று பல திருட்டுச் சம்பவங்கள் புத்தளம், கற்பிட்டி, முந்தல் , உடப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் பதிவாகியிருக்கின்றன.
இன்னும் துவிச்சக்கர வண்டிகள், முச்சக்கர வண்டிகளின் டயர்கள், மோட்டார் சைக்கிள்கள் என திருட்டுக்களின் பட்டியல்கள் நீண்டுகொண்டே செல்கிறது.
எரிபொருள் விலை உயர்வு, பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் வீதியோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் முச்சக்கர வண்டிகள் திருடப்படுவது ஒருபுறம் இருக்க, அதனை இரும்பு விலைக்காவது விற்பனை செய்து விட்டு பணத்தை பெறும் நோக்கில் பல திருட்டுக்கள் இடம்பெற்று வருகின்றமையை மறுக்க முடியாது.
போதைப்பாவனைக்கு அடிமையான நகர்களே இவ்வாறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொருளாதார ரீதியாக இன்று கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நிலையில், போதைப் பாவனைக்கு உள்ளானவர்கள் தங்களிடம் பணம் இல்லாத போது களவெடுத்தாவது போதை பொருள் பாவிக்கு வேண்டும் என்ற ஒரு நிலையில் இவ்வாறு திருட்டுக்களில் ஈடுபட்டு வருகின்றமை தெளிவாக அறியக்கூடியதாக உள்ளது.
இவ்வாறு மக்கள் நடமாட்டமில்லாத வீடுகளை நீண்ட நாட்களாக அவதானித்து கூரிய ஆயுதங்களுடன் வீடுகளுக்குள் நுழையும் மேற்படி போதைக்கு அடிமையான திருடர்களால் உயிர் அச்சுறுத்தல்களும் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
பட்டப்பகலில் இவ்வாறு தைரியமாக வந்து வீடுகளை உடைத்து கொள்ளைடித்துச் செல்லும் திருடர்களால் இன்று வீட்டில் தனிமையில் இருப்பதற்கே பெண்கள் அச்சப்படுகின்றனர் என சொல்லப்படுகிறது.
இதேவேளை, யாசகம் கேட்டு வீடுகளுக்கு வருபவர்கள் மீதும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
புத்தளத்தில் சில பிரதேசங்களில் யாசகம் கேட்டு சென்ற நபர்களினாலேயே அந்த வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், பொருட்களை விற்பனை செய்யும் போர்வையில் வரும் அடையாளம் தெரியாதவர்கள் விடயத்திலும் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதுடன் அறிமுகமில்லாத நபர்களை வீட்டுக்குள் அனுமதிப்பதிலும் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் யோசித்து அதுதொடர்பில் செயல்பட வேண்டும்.
அத்தோடு, கிராமப் புறங்களில் அறிமுகமில்லாத நபர்கள் அல்லது சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித் திரிவதனை அவதானித்தால் அவர்கள் தொடர்பில் ஊரிலுள்ளவர்களுக்கு தெரியப்படுத்தி சிவில் பாதுகாப்புக் குழுவினர் ஊடாக அதுபற்றி பொலிஸாருக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்படுபவர்கள் அல்லது சந்தேகப்படுபவர்கள் தொடர்பில் பொதுமக்கள் யாரும் தண்டனை கொடுக்க முற்படக் கூடாது. அது வேறு ஒரு ரூபத்தில் பிரச்சினையாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது.
எனவே, திருடர்களை பிடிப்பதற்கு பொலிஸ் குழுக்கள் இரவு, பகலாக செயற்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயத்தில் பொதுமக்கள் பொலிஸாருக்கு முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். அப்போதுதான் மேற்படி திருட்டுக்களை முற்றாக ஒழிக்க முடியும்.
புத்தளம் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ருவன் சுரங்க உடுகும்புரவின் ஆலோசனையில், குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜீவன் குமார தலைமையிலான பொலிஸ் குழு மேற்படி திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, திருட்டை ஒழிப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு எப்படி அவசியமாகின்றதோ அதுபோல திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்படுபவர்கள் தொடர்பில் இறுக்கமான சட்ட நடவடிக்கைகளை எடுக்க பொலிஸார் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டம் கடுமையான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.




