ஜூட் சமந்த
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி நகரை அண்மித்த பகுதியில் நேற்றிரவு (14) இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த புத்தளம், சாலியவெவ பகுதியைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் பண்டார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே குறித்த பொலிஸ் சார்ஜன்ட் இந்த எதிர்பாராத விபத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.
அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், முன்னால் பயணித்துக் கொண்டிருந்த லொறியின் வலது பக்கமாக பலமாக மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளான பொலிஸ் சார்ஜன்டை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் நேற்றிரவே அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், அவர் அம்யூலன்ஸ் வண்டியில் கொழும்பு நோக்கி கொண்டு செல்லப்பட்ட போது, மாரவில பகுதியை அண்மித்த வேளையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
