ஜூட் சமந்த
சிலாபம் நகரின் பண்டாரவத்தை பகுதியில் ஒரு தனியார் பஸ்ஸில் நடந்த தாக்குதலில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான இரண்டு இளைஞர்களும் மதம்பை - மெடகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
வெட்டுக்காயங்களுடன் இருந்த ஓர் இளைஞர் சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். பாதுகாப்புத் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்த மற்றைய இளைஞர், தொடர்ந்தும் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
10ஆம் திகதி மாலை, தனது பயணத்தை முடித்துக்கொண்டு அன்றாடப் பணிகளுக்குத் தயாராகிக்கொண்டிருந்த ஒரு தனியார் பஸ்ஸில் ஒரு கும்பல் புகுந்துள்ளது. தனிப்பட்ட தகராறே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இதுவரையும் கைது செய்யப்படவில்லை.
சிலாபம் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
